ADDED : ஆக 08, 2024 11:49 PM
மைசூரு: மத்திய அரசு, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்த மசோதாவுக்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், மசோதா, பார்லிமென்ட் கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.
இது குறித்து, முதல்வர் சித்தராமையா, மைசூரில் நேற்று கூறியதாவது:
பா.ஜ., மற்றும் தேசிய ஜனநாயக கட்சிகளுக்கு, சிறுபான்மையினர் மீது கோபம் இருப்பது போல் தெரிகிறது. பா.ஜ.,வினர் எப்போதுமே மதசார்பற்ற கொள்கைக்கு ஆதரவாக செயல்படவில்லை. ஆரம்பத்தில் இருந்தே, மதவாத கட்சியாகவே தன்னை அடையாளப்படுத்தி கொண்டது. மதசார்பற்ற கொள்கையை அவர்கள் நம்புவதில்லை.
கட்டாய மதமாற்ற தடை சட்டம், பசுவதை தடை சட்டங்களை கொண்டு வந்தனர். தற்போது, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா கொண்டு வர முயற்சிக்கின்றனர். வக்பு வாரிய சட்டம் என்பது, அச்சமுதாய மக்களின் தனி நபருக்கு உரியது.
அதில், அரசு தலையிடுவது சட்ட விரோதம். அரசியல் அமைப்பு கொள்கையில் நம்பிக்கை வைத்துள்ள காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி, மத்திய அரசின் சட்ட திருத்த மசோதாவை கடுமையாக கண்டிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.