வங்கி கணக்கு முடக்கும் நடவடிக்கை விசாரணை அமைப்புகளுக்கு எச்சரிக்கை
வங்கி கணக்கு முடக்கும் நடவடிக்கை விசாரணை அமைப்புகளுக்கு எச்சரிக்கை
ADDED : பிப் 28, 2025 12:39 AM
புதுடில்லி, 'வங்கிக் கணக்குகளை முழுமையாக முடக்கும் போது விசாரணை அமைப்புகள் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும்' என, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் வர்த்தகத்தில் நடந்த குற்றம் ஒன்றை மத்திய விசாரணை அமைப்பு விசாரித்தது. அப்போது, குற்றச்சாட்டுக்கு ஆளான நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்த 93 கோடி ரூபாய் பணத்தை மொத்தமாக முடக்கியது.
ஆனால் அந்த வழக்கில், ஏமாற்றப்பட்ட தொகை வெறும் 200 ரூபாய் மட்டுமே. வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது குறித்து டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:
மோசடி வழக்குகளில் குற்றவாளியின் வங்கிக் கணக்குகளை முழுமையாக முடக்குவதற்கு பதில், வழக்கில் தொடர்புடைய பண மதிப்புக்கு நிகரான தொகையை மட்டும் பாதுகாக்கும் வகையில் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட வேண்டும்.
முழுமையாக முடக்குவது பல்வேறு நிதி சிக்கல்களை ஏற்படுத்துவதுடன், அந்நிறுவனத்தையே முடக்கிவிடும் வாய்ப்புள்ளது. விசாரணை அமைப்புகள் வங்கிக் கணக்குகளை முடக்கும் போது மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும்.
இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் ஒரே விதமான கொள்கையை வகுக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.