டிச.7க்குள் பயணிகளுக்கு விமான கட்டணத்தை திருப்பி தரவேண்டும்: இண்டிகோவுக்கு மத்திய அரசு கெடு
டிச.7க்குள் பயணிகளுக்கு விமான கட்டணத்தை திருப்பி தரவேண்டும்: இண்டிகோவுக்கு மத்திய அரசு கெடு
UPDATED : டிச 06, 2025 04:20 PM
ADDED : டிச 06, 2025 03:09 PM

புதுடில்லி: டிச.7க்குள் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உரிய விமான கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் திருப்பி தர வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
விமானப்பணி, ஊழியர்களுக்கான பணிநேரம் உள்ளிட்ட புதிய விதிகள் காரணமாக, இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 1000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
எந்த மாற்று ஏற்பாடுகளும் விமான நிறுவனம் செய்து தராததால் நாடு முழுவதும் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் இண்டிகோ விமான பயணிகள் போராட்டத்தில் இறங்கினர். நிலைமை மோசம் அடைந்ததால் பயணிகளிடம் விமான நிறுவனம் மன்னிப்பு கோரியது.
புதிய விதிகளை விமான போக்குவரத்து ஆணையரகம் திரும்ப பெற்று விட்டாலும், இன்றும் 500க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவைகளின் ரத்து தொடர்கிறது.
இந் நிலையில், டிச.7ம் தேதி இரவுக்குள் ரத்து செய்யப்பட்ட விமானங்களின் பயணக் கட்டணத்தை பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இண்டிகோ நிறுவனம் திருப்பி தர வேண்டும் என்று மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;
தற்போதைய கட்டண விலையேற்றங்களில் இருந்து பயணிகளை காக்க, பாதிக்கப்பட்ட வழித்தடங்களில் நியாயமான கட்டணங்களை உறுதி செய்ய அமைச்சகம் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
பயணிகளை பாதுகாக்க, குறிப்பாக அவசர பயணம் மேற்கொள்ள உள்ளவர்களுக்காக கடுமையான கட்டண வரம்புகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கட்டண நிர்ணயங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மேலும் பயணிகள் நலனுக்காக எந்த விதிமீறல் என்றாலும் உடனடி நடவடிக்கை எடுப்போம்.
பாதிக்கப்பட்டு, நிலுவையில் உள்ள அனைத்து பயணிகளின் பணத்தை தாமதமின்றி வழங்க டிசம்பர் 7, 2025 அன்று இரவு 8 மணிக்குள் முடிக்க இண்டிகோ நிறுவனத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மறு அட்டவணை கட்டணங்களை வசூலிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து நிறுவனங்களின் எந்தவொரு இணக்கமில்லாத செயல்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு வழிவகுக்கும்.
சரக்குகளின் உரிய முகவரிகளை கண்டறிந்து 48 மணி நேரத்திற்குள் வீட்டிற்கு டெலிவரி செய்ய வேண்டும். மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளி பயணிகள் மற்றும் அவசர பயணம் தேவைப்படுபவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.
விமான நிறுவனங்களின் கட்டண நிலைகளை அமைச்சகம் தொடர்ந்து உன்னிப்பாக கண்காணிக்கும். பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளை மீறினால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு தமது எக்ஸ் வலைதள பதிவில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே பயணிகளுக்கு பணத்தை திருப்பி தருவதாக இண்டிகோ நிறுவனம் ஒப்பிதல் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டு உள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறியுள்ளதாவது;
சமீபத்திய சம்பவங்களின் விளைவாக, பயணம் ரத்து செய்ததை அடுத்து, அதற்கான பணம் தானாகவே திருப்பி அளிக்கப்படும். டிசம்பர் 5, 2025 முதல் டிசம்பர் 15, 2025 வரையிலான பயணத்திற்கான உங்கள் முன்பதிவுகளின் அனைத்து ரத்துசெய்தல், மறு அட்டவணை கோரிக்கைகளுக்கும் நாங்கள் முழு விலக்கு அளிப்போம்.
இவ்வாறு இண்டிகோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

