விமானக் கட்டண உச்சவரம்பை நிர்ணயித்தது மத்திய அரசு; மீறினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை
விமானக் கட்டண உச்சவரம்பை நிர்ணயித்தது மத்திய அரசு; மீறினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை
ADDED : டிச 06, 2025 02:34 PM

புதுடில்லி: விமானக் கட்டண உச்சவரம்பை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. மேலும், கட்டண உச்சவரம்பு, தற்போதைய நிலைமை முழுமையாக சீரடையும் வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
விமானிகள் பற்றாக்குறையால் இண்டிகோ விமான சேவை கடுமையாக பாதிககப்பட்டு உள்ளது. இதனால் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை காரணம் காட்டி, அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தது. இந்நிலையில், விமானக் கட்டண உச்சவரம்பை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் நிர்ணயித்துள்ளது.
இது குறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண உச்சவரம்புகளை அனைத்து விமான நிறுவனங்களுக்கும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். கட்டண உச்சவரம்பு, நிலைமை முழுமையாக சீரடையும் வரை அமலில் இருக்கும். கட்டணங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
மூத்த குடிமக்கள், மாணவர்கள் மற்றும் நோயாளிகள் உட்பட அவசரமாகப் பயணம் செய்ய வேண்டியவர்கள் நிதி நெருக்கடிக்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்வதே இந்த உத்தரவின் நோக்கமாகும். அனைத்து வழித்தடங்களிலும் நியாயமான கட்டணங்களை உறுதி செய்ய அமைச்சகம் அதன் அதிகாரங்களைப் பயன்படுத்தியுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

