அனில் அம்பானி நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.10,117 கோடி சொத்துக்கள் முடக்கம்
அனில் அம்பானி நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.10,117 கோடி சொத்துக்கள் முடக்கம்
ADDED : டிச 06, 2025 08:54 AM

புதுடில்லி: நிதி முறைகேடு தொடர்பான புகாரில், தொழிலதிபர் அனில் அம்பானியின், 'ரிலையன்ஸ்' குழும நிறுவனங்களுக்கு சொந்தமான 1,120 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்களை, அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதுவரை முடக்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு 10,117 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, 66. இவருக்கு சொந்தமான, 'ராகாஸ்' நிறுவனங்களுக்கு, 'யெஸ்' வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கியது. ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடனை, சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்ததாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்தது.
விசாரணையில்,2017 - 2019க்கு இடைப்பட்ட காலத்தில்அனில் அம்பானிகுழும நிறுவனங்கள், 17,000 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக இரண்டு வழக்குகளை சி.பி.ஐ., பதிவு செய்தது.இதுதவிர,சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதைத்தொடர்ந்து அனில் அம்பானி மற்றும் அவரது நெருங்கிய நபர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த வழக்கில், 8,997 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை ஏற்கனவே முடக்கியிருந்தது.
தற்போது கூடுதலாக, 1,120 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ளது.
இதில், 'ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்' நிறுவனத்தின் ஏழு சொத்துக்கள் உட்பட, 18 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. சென்னையில் உள்ள 231 குடியிருப்பு நிலங்கள், ஏழு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளும் இதில் அடங்கும்.
இதன்படி தற்போது பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களுடன் சேர்த்து, அனில் அம்பானியின், 'ரிலையன்ஸ்' குழுமத்திற்கு எதிரான நடவடிக்கைகளின் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட மொத்த சொத்துக்களின் மதிப்பு, 10,117 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

