நேருவை இழிவுபடுத்துவதே பாஜ அரசின் நோக்கம்; சோனியா குற்றச்சாட்டு
நேருவை இழிவுபடுத்துவதே பாஜ அரசின் நோக்கம்; சோனியா குற்றச்சாட்டு
ADDED : டிச 06, 2025 02:26 PM

புதுடில்லி: முன்னாள் பிரதமர் நேருவை அவமதிப்பதே பாஜ அரசின் நோக்கம் என்று காங்கிரஸ் எம்பி சோனியா குற்றம்சாட்டியுள்ளார்.
டில்லியில் உள்ள ஜவஹர் பவனில் நடந்த நிகழ்ச்சியில், மக்களின் வரிப்பணத்தில் பாபர் மசூதியை கட்ட அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு விரும்பியதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறிய கருத்திற்கு பதிலளித்து உரையாற்றினார்.
அவர் பேசியதாவது; நாட்டிற்கு நேரு ஆற்றிய பங்களிப்பு குறித்து ஆய்வு செய்வதும், விமர்சனம் செய்வதும் வரவேற்கத்தக்கது. ஆனால், திட்டமிட்டே தவறான கருத்துக்களைக் கூறி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதை ஏற்க முடியாது. நேரு பற்றி தரம் தாழ்ந்து, அவமதிப்பு செய்யும் முயற்சிகள் நடக்கின்றன. பிரதமராக இருந்த போது, நேரு எதிர்கொண்ட சவால்களை விட்டு விட்டு, அவரை எந்த வரலாற்று பின்னணியும் இல்லாத நபராக மாற்ற முயற்சிக்கின்றனர்.
இது ஒரு குறுகிய மனப்பான்மை கொண்ட சிந்தனை. நேருவை இழிவுபடுத்துவதே ஆளும் பாஜ அரசின் நோக்கம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்களின் நோக்கமே நேரு குறித்த நேர்மறையான எண்ணங்களை அழிப்பது மட்டுமல்ல. நாட்டின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார அடித்தளங்களை அழிப்பதுதான், இவ்வாறு அவர் கூறினார்.

