ADDED : மே 10, 2024 10:49 PM

சம்பங்கிராம்நகர் : பெங்களூரில் சாலையோரம் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா என்று விசாரணை நடக்கிறது.
பெங்களூரு, கே.எஸ்., கார்டன் பகுதியில் வசித்தவர் சத்யா, 22. பிளம்பர் வேலை செய்தார். நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் வெளியே சென்றார். மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை.
நேற்று காலை சம்பங்கிராம்நகரில், சாலையோரம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது காதில் ரத்தம் வடிந்து இருந்தது. அவர் இறப்புக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. சத்யாவும், ஒரு இளம்பெண்ணும் காதலித்துள்ளனர். இதுபற்றி அறிந்த இளம்பெண்ணின் வீட்டினர், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
சத்யா மீது போலீசிலும் புகார் செய்தனர். அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று, போலீசார் விசாரித்துள்ளனர். இளம்பெண்ணிடம் பேசக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தததாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் இளம்பெண்ணிடம், சத்யா மீண்டும் பேசி வந்தாராம்.
இந்த விவகாரத்தால் அவர் கொலை செய்யப்பட்டாரா, வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து, சம்பங்கிராம் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.