வயநாடு நிலச்சரிவு : நிவாரண நிதி வாங்க வாரிசு இன்றி 58 குடும்பத்தினர்
வயநாடு நிலச்சரிவு : நிவாரண நிதி வாங்க வாரிசு இன்றி 58 குடும்பத்தினர்
ADDED : ஆக 29, 2024 08:02 PM

திருவனந்தபுரம்:
வயநாடு நிலச்சரிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய, மாநில
அரசு அறிவித்துள்ள நிவாரண நிதியை வாங்குவதற்கு 58 குடும்பத்தைச் சேர்ந்த
வாரிசுகள் யாரும் இல்லாமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரள
மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழையால் கடந்த ஜூலை 30-ம் தேதியன்று
முண்டக்கல், சூரல்மலை ஆகிய இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில்
ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடு, உடமைகள் அனைத்தையும் இழந்துள்ளனர்.
கிராமங்கள் நிலச்சரிவில் புதைந்து போயின. இதில் 400-க்கும் மேற்பட்டோர்
பலியாயினர்.
நிலச்சரிவில் சிக்கிய உயிரிழந்தவர்களின்
குடும்பத்தினருக்கு கேரள அரசு சார்பில் தலா ரூ. 6 லட்சமும், மத்திய அரசின்
பிரதமர் பேரிடர் நிவாரண நிதியாக ரூ. 2 லட்சமும் அறிவிக்கப்பட்டது.
நிலச்சரிவில்
சிக்கி உயிரிழந்தவர்களில் இரு அரசுகளும் அறிவித்துள்ள நிவாரணநிதியைக்
கோருவதற்கு 58 குடும்பங்களைச் சார்ந்த வாரிசுகள் யாரும் முன்வராதது
சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசின் வழிகாட்டுதல்களின்படி,
உயிரிழந்தவர்களின் ரத்த உறவு அல்லது நெருங்கிய உறவினர்கள் பெற உரிமை
உண்டு. இதில் 58 குடும்பத்தினருக்கு சட்டப்பூர்வ வாரிசுகள் இல்லை என
கூறப்படுகிறது.
நிலச்சரிவு நிகழ்ந்த முண்டக்கல், சூரல்மலை ஆகிய
இரு கிராமங்களில் உயிரிழந்த 93 குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு அரசு
இழப்பீடு வழங்கியுள்ளது. ஏழு பேரின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு
அரசு இன்னும் இழப்பீடு வழங்கவில்லை.