ADDED : பிப் 14, 2025 11:15 PM

விக்ரம்நகர்:'சட்டசபை தேர்தல் தோல்வியை பிப். 8க்கு முன்பு வரை நினைத்துகூட பார்க்கவில்லை' என, முன்னாள் அமைச்சரும் ஆம் ஆத்மியின் மூத்த தலைவருமான சவுரப் பரத்வாஜ் தெரிவித்தார்.
சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் ஆம் ஆத்மியின் முன்னாள் அமைச்சரான சவுரப் பரத்வாஜ் போட்டியிட்டார். பா.ஜ.,வின் ஷிகா ராயிடம் 3,188 ஓட்டுகள் வித்தியாசத்தில் அவர் தோல்வி அடைந்தார்.
தேர்தல் தோல்வி குறித்து, தன் 'யூடியூப்' சேனலில் 'பெரோஸ்கர் நேதாஜி' என்ற தொடரில் சவுரப் பரத்வாஜ் விளக்கியுள்ளார். இந்தத் தொடர், நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்ளும் முழுநேர அரசியல்வாதியின் உணர்ச்சி மற்றும் தொழில்முறை போராட்டங்களைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குவதாக ஆம் ஆத்மி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோவில் சவுரப் பரத்வாஜ் கூறியிருப்பதாவது:
பிப்ரவரி 8 வரை, தோல்வி என்ற எண்ணம், என் மனதில் தோன்றவே இல்லை. எங்கள் அனைத்து தயாரிப்புகள், ஊடக தொடர்புகள் மற்றும் பொது ஈடுபாடுகளால் ஒரு தீர்க்கமான வெற்றி கிடைக்கும் என்றே நான் நம்பியிருந்தேன்.
ஓட்டு எண்ணிக்கை மையத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கையின்போது,என் முன்னிலை எதிர்பார்த்த அளவுக்கு வலுவாக இல்லை என்பதை நான் கவனித்தேன். இரண்டாவது சுற்றில், வெற்றி நழுவி வருவது தெளிவாகியது.
எண்ணிக்கைகள் என் தோல்வியை உறுதிப்படுத்தியதால், 10 ஆண்டுகளுக்கும் மேலாக என்னுடன் பணியாற்றிய தன்னார்வலர்கள் கண்ணீரை அடக்க போராடுவதை பார்த்தேன்.
ஒரு இளம் பெண்ணுக்கு, தந்தை தான் அவளுடைய ஹீரோ. என் மகள், என்னை தோற்றுப்போன ஒருவராகப் பார்க்கிறாள் என்ற எண்ணம், மனவேதனை அளித்தது. ஏமாற்றத்தின் மத்தியில் அவள், எளிமையாக, 'அப்பா, நான் உன்னை நேசிக்கிறேன்' என்று ஆறுதல் கூறினாள்.
பல ஆண்டுகளாக முழுநேர அரசியல்வாதியாக இருந்த நான், இப்போது ஒரு முறையான வேலை இல்லாமல் இருப்பதை உணர்கிறேன். வேலையில்லாத அரசியல்வாதி என்ன செய்வது?
அரசியலில் மாற்றுத் தொழில்களுக்கு மிகக் குறைந்த இடத்தையே வழங்குகிறது. சம்பளமும் இல்லை, பாதுகாப்பும் இல்லை.
வேலையில்லாத ஒரு தலைவர் என்ன செய்ய வேண்டும் என்று மக்களிடமிருந்து நான் கேட்க விரும்புகிறேன்?.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்தத் தொடர் வாயிலாக, தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு அரசியல்வாதிகள் எவ்வாறு வாழ்க்கையை வழிநடத்த முடியும் என்பது குறித்த கருத்துகளை பகிர்ந்து கொள்ள பார்வையாளர்களை அழைக்கும் தொடர் இது.