முன்னாள் எம்எல்ஏவுக்கான பென்ஷனுக்கு விண்ணப்பித்த ஜக்தீப் தன்கர்
முன்னாள் எம்எல்ஏவுக்கான பென்ஷனுக்கு விண்ணப்பித்த ஜக்தீப் தன்கர்
UPDATED : ஆக 30, 2025 10:16 PM
ADDED : ஆக 30, 2025 10:10 PM

ஜெய்ப்பூர்: முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், ராஜஸ்தான் முன்னாள் எம்எல்ஏவுக்கான ஓய்வூதியத்தை பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துணை ஜனாதிபதியாக பதவி வகித்த ஜக்தீப் தன்கர், உடல் நிலையை காரணம் காட்டி சமீபத்தில் தன் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் இது பற்றி எதிர்க்கட்சியினர் பல்வேறு வகையில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ராஜஸ்தான் முன்னாள் எம்எல்ஏவுக்கான ஓய்வூதியத்தை பெறுவதற்காக ஜக்தீப் தன்கர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
1993 முதல் 1998 வரை கிஷன்கர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்ததற்கு 2019 வரை ஜக்தீப் தன்கர் ஓய்வூதியம் பெற்று வந்தார். மேற்கு வங்கத்தின் கவர்னராக நியமிக்கப்பட்ட பிறகு இது நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த நிலையில், முன்னாள் எம்எல்ஏவாக தனது ஓய்வூதியத்தை மீண்டும் தொடங்க வைக்க ராஜஸ்தான் சட்டசபை செயலகத்திடம் ஜக்தீப் தன்கர் மீண்டும் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டால், துணை ஜனாதிபதி பதவியை அவர் ராஜினாமா செய்த தேதியிலிருந்து ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் அவர்கள் கூறினர். தற்போது 74 வயதான தன்கர், முன்னாள் எம்எல்ஏவாக மாதத்திற்கு ரூ. 42,000 ஓய்வூதியம் பெற தகுதியுடையவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.