கல்யாண சமையல் சாதம்... காய்கறிகள் பிரமாதம்...! 'கூட்டாஞ்சோறு, நாடன் பொதி சோறு' சாப்பிடலாமா...
கல்யாண சமையல் சாதம்... காய்கறிகள் பிரமாதம்...! 'கூட்டாஞ்சோறு, நாடன் பொதி சோறு' சாப்பிடலாமா...
ADDED : மே 26, 2024 06:46 AM

கொரோனா காலத்தில் அண்டை வீட்டினருக்கு உதவ, உணவு தயாரித்தவர்கள், தற்போது பெங்களூரு முழுதுக்கும் உணவு வினியோகம் செய்து வருகின்றனர்.
பெங்களூரு, வித்யாரண்யபுராவை சேர்ந்தவர்கள் சேதுமாதவன், 62. இவரது மனைவி உஷா, 57. சேதுமாதவன், துபாயில் பணியாற்றி வந்தார். 2020ல் தனது மூத்த மகள் திருமணத்துக்காக பெங்களூரு வந்தார். இவர்களின் பூர்வீகம் கேரளா.
கொரோனாவில் உதவி
அந்நேரத்தில் கொரோனா முதல் அலை உருவெடுத்தது. மீண்டும் துபாய் செல்ல இருந்தவரை, குடும்பத்தினர் தடுத்து, இங்கேயே இருக்க வைத்தனர். அந்நேரத்தில் இவர்களின் வீட்டின் அருகில் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அரசும், இப்பகுதியை 'சீல்' வைத்தது. இதனால் இப்பகுதியினர் வெளியே செல்ல முடியாமல், உணவு வாங்க முடியாமல் தவித்தனர்.
அப்போது, அவர்கள், உஷாவுக்கு போன் செய்து, 'உணவு தயார் செய்து தர முடியுமா?' என கேட்டனர். இதே போன்று அதே பகுதியில் இன்னும் இரண்டு - மூன்று வீட்டில் இருந்தும் கேட்டனர். அவர்களுக்கும் உணவு தயாரித்து கொடுத்தனர்.
கொரோனா தாக்கம் முடிவுக்கு வந்த பின், 'உங்களின் கை பக்குவம் நன்றாக உள்ளது. இதை ஏன் தொழிலாக செயல்படுத்த கூடாது?' என ஆலோசனை கூறினர்.
அவர்கள் கூறியபடி, முதலில் சிறிதாக ஹோட்டல் தொழிலை துவக்கினர். தவிர்க்க முடியாத காரணத்தால், வீட்டில் இருந்து முதன் முதலில் இரு குடும்பத்துக்கு சாதாரணமாக உணவு தயார் செய்து கொடுத்தனர். நாளடைவில் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
சத்யா சாப்பாடு
இதன் ஒரு கட்டமாக 'சத்யா' எனப்படும் கல்யாண சாப்பாடு தயாரித்தனர். இதில் கேரள பாணியில் 22 முதல் 25 வகை பொறியல், கூட்டு அடங்கிய உணவு தயாரிக்க துவக்கினர். bygbyt என்ற செயலி மூலம், விற்பனை செய்தனர். இதன் பலனாக பெங்களூரு முழுதும் ஆர்டர்கள் வந்தன.
அதன் பின், அந்த செயலி நிறுவனம் மூடப்பட்டதால், இவர்களாகவே முகநுால் வழியாக அறிவிப்பு வெளியிட்டனர். இதற்கும் நல்ல பலன் கிடைத்துள்ளது. வீட்டில் விசேஷம், பண்டிகை, குறிப்பாக கேரளாவின் ஓணம் பண்டிகையின்போது பல 'ஆர்டர்கள்' வருகின்றன.
அப்போது வீட்டில் இருந்து உணவு தயார் செய்ய முடியாது. எனவே, தனியாக ஒரு இடம் பிடித்து, உணவு சமைத்து 'ஆர்டர்' கொடுப்பவர்களுக்கு வழங்குகின்றனர். இதற்காக ஒரு நாள் முன்னதாக பதிவு செய்ய வேண்டும்.
தமிழர் பாரம்பரிய உணவு வகைகளையும் சமைத்து தருகின்றனர். இவர்களிடம் சமையல் செய்வோர் தமிழர்கள் என்பதால், வாடிக்கையாளர்கள் கேட்கும் உணவு வகைகளை, 'கைப்பக்குவமாக' செய்து கொடுக்கின்றனர்.
ஒருமுறை இவர்களிடம் உணவு சாப்பிட்டால், மீண்டும் அவர்களிடமே உணவு வாங்குவதாக தெரிவிக்கின்றனர்.
கடந்த பொங்கல் திருநாளன்று வாடிக்கையாளர்கள் கேட்ட உணவுகளை செய்து கொடுத்தனர்.
நாடன் பொதி சோறு
தமிழகம் திருநெல்வேலி பகுதியில் அனைத்து காய்கறிகளையும் வைத்து சமைக்கப்படும் கூட்டாஞ்சோறு போன்று, கேரளாவில் 'நாடன் பொதி சோறு' என்று அழைக்கின்றனர்.
முந்தைய காலத்தில் 'டிபன் பாக்ஸ்' வருவதற்கு முன்பு, கேரளாவில் வாழை இலையில் சாதம், பொறியல் கட்டி கொடுப்பர். அதுபோன்று, பாரம்பரியத்தை மறக்காமல் இருக்க 'நாடன் பொதி சோறு' தருகின்றனர்.
ஆம்லேட்
இதில் சாதத்துடன் அப்பளம், வடை, பொறியல் என சைவமாகவும்; சாதத்துடன் மீன், சிக்கன், ஆம்லேட் என அசைவ உணவாகவும் கட்டி கொடுக்கின்றனர்.
இப்பகுதியில் உள்ள பல நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு, பொதிசோறு அனுப்பி வருகின்றனர். இத்தம்பதியின் இரு மகள்களும் உதவுகின்றனர்.
தேவைப்படுவோர், சேதுமாதவன் 63628 39048, உஷா 99453 17667 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.- நமது நிருபர் -