ADDED : ஏப் 21, 2024 06:15 AM

இந்த முறை, 400 தொகுதிகளில் வெற்றி என மோடியும், பா.ஜ.,வினரும் கூறி வருகின்றனர். இது சாத்தியமா என்பது சந்தேகமாக உள்ளது. இருப்பினும், இதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார் மோடி.
ஒரு லோக்சபா தொகுதியில், ஆறு சட்டசபை தொகுதிகள் அடக்கம். பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களுக்கு மோடி ஒரு உத்தரவிட்டுள்ளார். 'ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வும் அவர்கள் தொகுதிகளிலிருந்து அதிகபட்ச ஓட்டுகளை பா.ஜ., கூட்டணி எம்.பி., வேட்பாளருக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும். அப்படி ஒத்துழைத்தால் தான், மத்தியில் நாம் ஆட்சி அமைக்க முடியும்' என, கட்டளையிட்டுள்ளாராம் மோடி.
இதனால், சில மாநிலங்களில் உள்ள கோஷ்டி பூசல்களை, ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வரலாம் என்பது மோடியின் திட்டம். 'மஹாராஷ்டிராவில் பா.ஜ.,வின் கூட்டணி கட்சிகளான, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்., ஆகிய கட்சிகளுக்கும், பா.ஜ.,விற்கும் இடையே சில பிரச்னைகள் உள்ளன. மோடியின் இந்த உத்தரவால் மஹாராஷ்டிரா கூட்டணிக்கு களத்தில் பிரச்னை இருக்காது' என்கின்றனர். இந்த மாநிலத்தில், 48 தொகுதிகள் உள்ளன; 40ல் வெற்றி என்பது மோடியின் இலக்கு!

