ADDED : மார் 28, 2024 10:42 PM

பெலகாவி : “பெலகாவிக்கு ஜெகதீஷ் ஷெட்டரின் பங்களிப்பு என்ன?” என, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் ஆவேசமாக கேட்டுள்ளார்.
கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர், பெலகாவியில் நேற்று அளித்த பேட்டி:
பெலகாவி தனது கர்ம பூமி என, பா.ஜ., வேட்பாளர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறி உள்ளார். இப்படி சொல்வதற்கு அவருக்கு வெட்கமாக இல்லையா? கொரோனா நேரத்தில் பெலகாவிக்கு வந்த, ஆக்சிஜன் சிலிண்டர்களை, ஹூப்பள்ளி - தார்வாட் கொண்டு சென்றவர் அவர். இப்போது பெலகாவி மக்கள் நலனில் அக்கறை இருப்பது போல, நாடகம் ஆடுகிறார்.
ஹூப்பள்ளி - தார்வாட் மத்திய தொகுதியில் இருந்து, ஆறு முறை பா.ஜ., சார்பில் வென்றுள்ளார். முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், சபாநாயகர், மாநில தலைவர் என, அனைத்து பதவிகளையும் அனுபவித்துவிட்டு, சீட் கிடைக்கவில்லை என்று, எங்கள் கட்சிக்கு வந்தார்.
ஆறு முறை வெற்றி பெற்றாலும், அவரை மக்கள் தோற்கடித்தனர். சொந்த தொகுதியில் வெற்றி பெற முடியாத அவரால், பெலகாவியில் வெற்றி பெற முடியுமா?
ஜெகதீஷ் ஷெட்டருக்கு எதிராக, அவரது கட்சியினரே 'கோ பேக்' பிரசாரத்தை துவக்கி உள்ளனர். பெலகாவி மக்கள் பிரச்னைகளை பற்றி, பார்லிமென்டில் பேச, திறமையான எம்.பி., தேவை.
அரபாவி, கோகாக்கில் காங்கிரசால் முன்னிலை பெற முடியாது என்று யார் சொன்னது? அரசியல் என்பது தேங்கும் தண்ணீர் இல்லை; ஓடும் நதி போன்றது. பெலகாவி ரூரல் தொகுதியில், காங்கிரஸ் வெற்றி பெறவே முடியாது என்ற நிலை இருந்தது. அந்த தொகுதியில் இருந்து, இரண்டு முறை தொடர்ந்து, எம்.எல்.ஏ., ஆகி உள்ளேன். அரபாவி, கோகாக் மக்களும், காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிப்பர் என்று, நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

