ADDED : மே 19, 2024 11:46 PM

டெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ராசி, 63, பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதிபருக்கு என்ன ஆனது என்ற விபரம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.
மேற்காசிய நாடான ஈரானின் அதிபர் இப்ராஹிம் ராசி. இவர், அஜர்பைஜான் நாட்டின் ஹராஸ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை திறக்கும் நிகழ்ச்சிக்காக நேற்று ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக, அவர் பயணித்த ஹெலிகாப்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
டெஹ்ரான் நகரில் இருந்து 600 கி.மீ., தொலைவில் உள்ள ஜோல்பாவில் அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதிபரின் நிலை பற்றி உடனடியாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
அதிபர் இப்ராஹிம் ராசியுடன், ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹின் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளும் ஹெலிகாப்டரில் பயணித்துள்ள நிலையில், அவர்களின் நிலை என்னானது என்பதும் தெரியவில்லை.
முதற்கட்ட தகவலின்படி, விபத்து நிகழ்ந்த இடம், அடர்ந்த வனப்பகுதி என்றும், அங்கு மீட்புக்குழுவினர் விரைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2021ல் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற இப்ராஹிம் ராசி, இஸ்ரேலுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். சமீபத்தில், சிரியாவில் உள்ள ஈரான் நாட்டின் துாதரகத்தின் மீது, இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து, இஸ்ரேல் மீது, ஈரான் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இதனால், இருநாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவுகிறது. இதேபோல், அணு ஆயுத தயாரிப்பு விஷயத்தில் அமெரிக்காவும் ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ளது.

