நான்கு சுவருக்குள் நடந்த 'சீக்ரெட்' என்ன? இப்படி பண்ணிட்டாங்களே என தேஜஸ்வினி 'ஜம்பிங்'
நான்கு சுவருக்குள் நடந்த 'சீக்ரெட்' என்ன? இப்படி பண்ணிட்டாங்களே என தேஜஸ்வினி 'ஜம்பிங்'
ADDED : மார் 31, 2024 05:05 AM

பா.ஜ.,வில் இருந்து விலகிய தேஜஸ்வினி கவுடா, டில்லியில் நேற்று காங்கிரசில் இணைந்தார்.
கர்நாடக பா.ஜ., - எம்.எல்.சி.,யாக இருந்தவர் தேஜஸ்வினி கவுடா, 57. கடந்த 27ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரசில் இணைவார் என்று தகவல் வெளியானது.
அதன்படி டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், மூத்த தலைவர்கள் பவன் கேரா, ஜெய்ராம் ரமேஷ் முன்னிலையில், தேஜஸ்வினி கவுடா காங்கிரசில் இணைந்தார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி:
பா.ஜ.,வில் இருந்து காங்கிரசுக்கு மாற வேண்டும் என்பது, திடீரென எடுத்த முடிவு இல்லை. ஏற்கனவே காங்கிரசில் ஒன்பது ஆண்டுகள் இருந்து உள்ளேன். பா.ஜ.,வில் 10 ஆண்டுகள் பணியாற்றி உள்ளேன். ஜனநாயகம் என்றால் தேர்தலில் போட்டியிட, அனைத்து சமூகத்திற்கும் வாய்ப்பு தர வேண்டும். ஆனால் பா.ஜ.,வில் அது இல்லை.
கர்நாடக பா.ஜ.,வில் வறட்சி இல்லை; கட்சி செழிப்பாக உள்ளது. 2014ல் சித்தராமையா முதல்வராக இருந்தபோது, காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தேன். அப்போது மாநிலத்தில் பா.ஜ., ஆட்சி இல்லை; நரேந்திர மோடி பிரதமராக இல்லை; டபுள் இன்ஜின் அரசு இல்லை.
இந்திரா வெற்றி
தேசிய அளவில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும். இதற்கு, கட்சியினர் அனைவரும் சேர்ந்து, கடுமையாக உழைக்க வேண்டும். பா.ஜ.,வில் இருந்தபோது, உண்மையான விஷயங்களை வெளிப்படையாக பேசினேன்.
அந்த கட்சிக்கு, நான் துரோகம் செய்யவில்லை. 10 ஆண்டுகள் பா.ஜ.,வில் இருந்து உள்ளேன். தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு தரவில்லை. எம்.எல்.சி., பதவிக்காக, நான் அங்கு செல்லவில்லை.
பத்திரிகையாளராக இருந்து அரசியலுக்கு வந்தேன். மனசாட்சிபடி அரசியல் செய்கிறேன்.
அரசியலில் பல கஷ்டங்கைளை தாண்டி, பிரதமர் பதவிக்கு வந்தவர் இந்திரா.
அவசர நிலையில் அமலில் இருந்தபோது, சிக்கமகளூரு மக்கள், அவரை எம்.பி., ஆக்கினர். பல்லாரி மக்கள் சோனியாவை வெற்றி பெற வைத்தனர். கர்நாடகாவுக்கும், காங்கிரசுக்கும் பிரிக்க முடியாத பந்தம் உள்ளது.
ஏன் கூட்டணி?
லோக்சபா தேர்தலில் பெங்களூரு ரூரல் சீட் தரும்படி கேட்கவில்லை. மைசூரு அல்லது பெங்களூரு வடக்கு தொகுதி சீட் கேட்டேன்.
அதுவும் வெளிப்படையாக கேட்கவில்லை. நான்கு சுவருக்குள் கட்சித் தலைவர்களிடம் கேட்டேன். ஆனால் நிராகரித்துவிட்டனர்.
பரபரப்பான அறிக்கைகள் வெளியிட மட்டும் தான், பா.ஜ.,வுக்கு ஒக்கலிகர்கள் தேவையா? ரவி, பிரதாப் சிம்ஹா, சதானந்த கவுடா ஆகியோருக்கு சீட் மறுக்கப்பட்டது ஏன்?
பா.ஜ.,வுக்கு ஒக்கலிகர்கள் மீது நம்பிக்கை இல்லை. ம.ஜ.த.,வை எதற்காக கூட்டணியில் சேர்க்க வேண்டும்?
பெங்களூரு ரூரல் காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷை ஆதரித்து, தீவிர பிரசாரம் செய்வேன். கட்சி மேலிடம் கூறினால் 28 தொகுதிகளிலும், பிரசாரம் செய்ய தயாராக உள்ளேன்.
முதல்வர் சித்தராமையா மக்கள் தலைவர். துணை முதல்வர் சிவகுமார் எங்கள் சமூகத்தை சேர்ந்தவர். கர்நாடகாவை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் தேசிய தலைவராக உள்ளார். காங்கிரஸ் வெற்றிக்கு எனது பங்களிப்பும் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கனகபுரா லோக்சபா தொகுதியில், 1999 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தேஜஸ்வினி கவுடா, முன்னாள் பிரதமர் தேவகவுடாவை தோற்கடித்து எம்.பி., ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

