தங்கவயல் மருத்துவமனைக்கு விடிவு காலம் எப்போது? 54 ஊழியர்களுக்கு 5 பேர் மட்டுமே... ஏக்கத்துடன் நோயாளிகள்!
தங்கவயல் மருத்துவமனைக்கு விடிவு காலம் எப்போது? 54 ஊழியர்களுக்கு 5 பேர் மட்டுமே... ஏக்கத்துடன் நோயாளிகள்!
ADDED : மே 21, 2024 06:14 AM

தங்கவயலில் தங்கச்சுரங்கம் இயங்கிய காலத்தில், சர்வதேச தரத்துக்கு நிகராக, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை போல, தங்கச்சுரங்க மருத்துவமனை இருந்தது.
தொழிலாளர்களுக்கும், தொழிலாளர் குடும்பத்தினருக்கும் இலவச மருத்துவம் வழங்கப்பட்டது. ஆனால் தங்கச் சுரங்கம் மூடப்பட்ட பின், தங்கச்சுரங்க மருத்துவமனை மூடப்பட்டது. இதனால் தங்கச்சுரங்க குடியிருப்பு பகுதியினர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
தங்கவயல் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள 4 லட்சம் பேருக்கு, ராபர்ட்சன்பேட்டை அரசு மருத்துவமனை உதவியாக உள்ளது. தங்கவயலை தாலுகாவாக அரசு அறிவித்து எட்டு ஆண்டுகள் கடந்து விட்டது.
ஆயினும் இந்த மருத்துவமனை, தாலுகா தகுதியை பெறாமல், சப் டிவிஷன் மருத்துவ மனையாகவே இயங்கி வருகிறது.
ரூ.10 கோடி
இந்த மருத்துவமனை, உள் கட்டமைப்புக்காக, அரசு 10 கோடி ரூபாய் ஒதுக்கியது. இதில் 8 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. லிப்ட் வசதியுடன் அடுக்குமாடி கட்டடம் உருவானது.
ஆயினும் ஐ.சி.யு., பிரிவு திறக்கப்படவில்லை. புதிய கட்டடத்தை திறக்க வந்த அப்போதைய பா.ஜ.,வின் சுகாதார அமைச்சர் சுதாகர், ஓரிரு வாரத்தில் 'சிடி' ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் ஏற்படுத்தி தருவதாக உறுதி அளித்தார். அவர் பதவிக்காலம் முடிந்தது; ஆட்சியும் மாறியது. அவர் கூறிய எதுவும் நடக்காமல் போனது.
மருந்து, மாத்திரைகள், ஊசி மருந்து ஆகியவை அரசு இலவசமாக வழங்கினாலும், சீட்டு எழுதிக் கொடுத்து வெளியில் இருந்து வாங்கி வருமாறு கூறும் முறை மட்டும் இன்னும் மாறவில்லை.
சுவாச கோளாறு பிரச்னைக்கு உயிர் காக்கும் கருவியை, மருத்துவமனை கிடங்கில் போட்டு வைத்துள்ளனர்.
சுரங்கத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் நுரையீரலை பொத்தலாக்கும் 'சிலிகாசிஸ்' எனும் நோய்க்கு சிகிச்சை அளிக்க மருத்துவ வசதி இல்லை. சிகிச்சை பெறுவதற்கு பெங்களூரில் உள்ள ராஜிவ்காந்தி மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும்.
தங்கவயலில் ரத்த அழுத்தம், நீரிழிவு நோயாளிகள் ஏராளமானோர் உள்ளனர். இத்தகைய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களே இல்லை: இதற்கான தனி பிரிவும் இல்லை.
எனவே, பெங்களூரில் உள்ள ஜெயதேவா மருத்துவமனையுடன் தொடர்பு கொண்டு 'டெலி மெடிசன்' அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
அவசர சிகிச்சைக்கு கோலார் அல்லது பெங்களூருக்கு அனுப்பி வைக்கின்றனர். அதுவரை நோயாளிகள் தாக்குப் பிடிப்பரா என்பது கேள்விக்குறி தான்.
மருத்துவமனையில் குழந்தைகள், இ.என்.டி., எனும் காது, மூக்கு, தொண்டை பிரிவு, எலும்பு, கண், ஸ்கேனிங், அறுவைச் சிகிச்சை பிரிவுக்கு 15 டாக்டர்கள் இருக்க வேண்டும். ஆனால் 11 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர்.
தேடினாலும் கிடைப்பதில்லை
பொது மருத்துவம், அறுவைச் சிகிச்சை பிரிவுக்கு தலா இருவரை நியமிக்க வேண்டும் என்பது மருத்துவ வட்டார தகவல். ஆனால், தினமும் மூன்று, நான்கு டாக்டர்களை தவிர மற்றவர்களை தேடினாலும் கிடைப்பதில்லை.
அரசு கணக்குப்படி, மருந்தக பிரிவில் 5 பேர் தேவைப்படுகின்றனர். இதில் சீனியர் 3 பேர் இருக்க வேண்டும்; ஆனால் ஒருவர் மட்டுமே உள்ளார். ஜூனியர் 2 பேர் இருக்க வேண்டும்; ஒருவர் மட்டுமே உள்ளார்.
செவிலியர்கள் 26 பேருக்கு 21 பேர் உள்ளனர். செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் தான் பணிகளில் உள்ளனர்.
'குரூப் டி' எனும் கடைநிலை ஊழியர்கள் 54 பேர் தேவை. ஆனால் இருப்பது 5 பேர் மட்டுமே. இது தவிர 37 பேர் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர். ஈ.சி.ஜி., டெக்னிஷியன்கள் இருவர் தேவை. ஆனால், ஒருவர் கூட இல்லை. ஸ்கேனிங் பிரிவில் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு மட்டுமே ஒரு டாக்டர் உள்ளார். மற்ற நாட்களில் பங்கார்பேட்டை, மாலுார், முல்பாகல் என சென்று விடுகிறார். ஸ்கேனிங் பிரிவில் பயிற்சியாளர்கள் கிடையாது. இதனால் அந்த அறையை மூடி வைத்துள்ளனர்.
இரவில்
தினமும் 24 மணி நேரமும் இயங்கும் இந்த மருத்துவமனையில் மாலை 6:00 மணிக்கு பின் மருத்துவர்கள் தென்படுவதே இல்லை. அவசர சிகிச்சை பிரிவில் மட்டுமே ஒரு மருத்துவர் இருப்பார். அவசர நோயாளிகளை அழைத்துச் செல்ல இரு ஆம்புலன்கள் உள்ளன.
தங்கவயல் மருத்துவமனையில் மருத்துவர்கள், மருத்துவ வசதி இல்லை என்று சமூக அமைப்பினர் கூறி வருகின்றனர். அரசின் கவனத்தை ஈர்க்க கோரிக்கை மனுக்களையும் பல முறை அனுப்பி உள்ளனர். ஆனாலும் எந்த பலனும் இல்லை.
விரைவில் ஐ.சி.யு., இயங்கும்
தங்கவயல் அரசு மருத்துவமனைக்கு என்னென்ன தேவையோ, அனைத்து விபரங்களையும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். டாக்டர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை இல்லாமல் நியமிப்பதாக உயர் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். முன்பை விட தற்போது அதிக அளவு நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். ஐ.சி.யு., பிரிவு, விரைவில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மருத்துவமனையை தரம் உயர்த்த, எல்லா முயற்சிகளும் மேற்கொண்டு வருகிறோம்.
சுரேஷ் குமார், தலைமை மருத்துவர்.

