எப்போது நடக்கும் உள்ளாட்சி தேர்தல்? தலைவர்களுக்காக உழைத்தவர்கள் ஏக்கம்
எப்போது நடக்கும் உள்ளாட்சி தேர்தல்? தலைவர்களுக்காக உழைத்தவர்கள் ஏக்கம்
ADDED : மே 13, 2024 09:40 PM
பெங்களூரு: லோக்சபா தேர்தலில் தலைவர்களுக்காக உழைத்த கட்சித் தொண்டர்கள், பெங்களூரு மாநகராட்சி தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலை எப்போது நடத்துவார்கள் என்று ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.
கர்நாடகாவில் லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில், தலைவர்கள் ஓய்வில் உள்ளனர். தலைவர்கள் வெற்றி பெறுவதற்காக, அனைத்து அரசியல் கட்சித் தொண்டர்களும், கடந்த இரண்டு மாதங்களாக கடுமையாக உழைத்தனர்.
மாநாடு, பொதுக் கூட்டம், ரோடு ஷோ, தெருமுனை கூட்டம், பிரமுகர்களுடன் ஆலோசனை, வீடுதோறும் சென்று வாக்காளர்களை சந்திப்பது இப்படி, பல்வேறு கட்ட பிரசாரங்களில் தொண்டர்கள் ஈடுபட்டனர்.
'தலைவர்களுக்காக உழைத்த நமக்கு என்ன பிரதிபலன் கிடைக்கும்?' என, தொண்டர்கள் ஏக்கத்துடன் உள்ளனர். ஆம், மூன்றரை ஆண்டுகளாக பெங்களூரு மாநகராட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.
முந்தைய பா.ஜ., ஆட்சியின்போது, பெங்., மாநகராட்சிக்கு புதிய சட்டம் கொண்டு வந்து, வார்டுகளின் எண்ணிக்கையை 198லிருந்து, 243ஆக உயர்த்தப்பட்டது. பின்னர் வந்த காங்கிரஸ் அரசு, வார்டுகளின் எண்ணிக்கையை, 243லிருந்து, 225ஆக குறைத்தது. ஆனால், தேர்தலை நடத்த யாரும் முன்வரவில்லை என்று தொண்டர்கள் திட்டித் தீர்க்கின்றனர்.
இதற்கிடையில், உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டு மறுவரையறை பணிகளும் இன்னும் முடியவில்லை. உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. ஆளுங்கட்சி தரப்பில், அவ்வப்போது பூச்சாண்டி காட்டி, லோக்சபா தேர்தலுக்கு தங்களை நன்றாக பயன்படுத்திக் கொண்டனர் என, தொண்டர்கள் முணுமுணுக்கின்றனர்.
நீதிமன்றம் சொன்னபடி செயல்படுவோம் என்று சொல்லும் ஆளுங்கட்சி, பெங்களூரு மாநகராட்சி வார்டு மறுவரையறை முடிந்து பல மாதங்கள் ஆகியும், சமூக வாரியாக இதுவரை இட ஒதுக்கீடு அறிவிக்கவில்லை.
இட ஒதுக்கீடு இறுதி செய்தால், கர்நாடக தேர்தல் கமிஷன், தேர்தலுக்கான நடைமுறைகளை துவங்கும்.
இனியாவது தங்கள் மீது கருணை காண்பித்து, பெங்களூரு மாநகராட்சித் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று பலரும் கோரி வருகின்றனர். லோக்சபா தேர்தல் முடிவுகளை பொருத்து ஆளுங்கட்சி முடிவு செய்யும் என்று அக்கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

