புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவான முதல் வழக்கு எது?
புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவான முதல் வழக்கு எது?
ADDED : ஜூலை 02, 2024 01:39 AM
புதுடில்லி, புதிதாக நடைமுறைக்கு வந்துள்ள குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் வழக்கு எது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டங்களில் சீர்திருத்தம் மேற்கொண்ட மத்திய அரசு, மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை இயற்றியது.
இடையூறு
பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷிய அதினியம் என பெயரிடப்பட்டுள்ள இந்த சட்டங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்தன.
இந்நிலையில், புதுடில்லி ரயில் நிலையம் அருகே உள்ள நடை மேம்பாலத்தின் கீழ் பீஹாரைச் சேர்ந்த பங்கஜ் குமார், 23, என்பவர் தள்ளுவண்டி கடையில் தண்ணீர், பீடி, சிகரெட் விற்று வருகிறார்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் அவர் தள்ளுவண்டி கடை வைத்துள்ளது, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது.
அங்கு ரோந்து சென்ற போலீசார், கடையை அப்புறப்படுத்தும்படி குமாரிடம் கூறினர்.
அவர் கடையை அகற்ற மறுத்ததால், பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 285வது பிரிவின் கீழ், பொது மக்களுக்கு இடையூறு விளைவிப்பதாக நேற்று அதிகாலை 1:30 மணிக்கு அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அப்போது, பங்கஜ் குமாரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் குறித்த விபரங்களை, 'இ - பிரமான்' செயலியில் போலீசார் பதிவு செய்தனர். இந்த தகவல்கள், டில்லி குற்றவியல் போலீசாரின் ஆவணங்களில் உடனடியாக பதிவேற்றப்படும்.
புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் வழக்கு இது தான் என நேற்று தகவல் வெளியானது.
ஆனால், இது குறித்து நேற்ற மாலை விளக்கம் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ''டில்லியில் பதிவு செய்யப்பட்டது, முதல் வழக்காக இருந்தாலும், பழைய விதிமுறைகளின் படியே அந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
''மத்திய பிரதேசத்தின் குவாலியரில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் நேற்று அதிகாலை, 12:10க்கு மோட்டார் சைக்கிள் திருட்டு குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கு தான், புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்காக கருதப்படும்,'' என்றார்.
தமிழ் மொழியில்
இந்நிலையில், புதிய சட்டங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேலும் கூறியதாவது:
அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் பட்டியலிட்டுள்ள அனைத்து மொழிகளிலும் இந்த சட்டங்கள் கிடைக்கும். இந்த சட்டத்தின் பெயர்கள் தொடர்பாக ஏதாவது ஆட்சேபனை இருந்தால், என்னை சந்தித்து அது குறித்து தெரிவிக்கலாம்.
இந்த சட்டம் தமிழிலும் கிடைக்கும். தமிழ் மொழியிலும் இந்த சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்த விஷயத்தில் தமிழக எம்.பி.,க்களோ, முதல்வரோ என்னை சந்திக்க இதுவரை நேரம் எதுவும் கேட்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.