ஷிவமொகாவில் யார் கை ஓங்கும்? தொண்டர்கள் எதிர்பார்ப்பு
ஷிவமொகாவில் யார் கை ஓங்கும்? தொண்டர்கள் எதிர்பார்ப்பு
ADDED : மே 07, 2024 06:22 AM

ஷிவமொகா தொகுதியில் 33 ஆண்டுகளாக இரண்டு, 'பவர்புல்' குடும்பங்களுக்கு இடையே அரசியல் ரீதியான போராட்டம் நடக்கிறது. எந்த குடும்பத்தின் கை ஓங்கும் என, தொண்டர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.
கர்நாடகாவில் இன்று இரண்டாம் கட்ட ஓட்டு பதிவு நடக்கும் லோக்சபா தொகுதிகளில், ஷிவமொகாவும் ஒன்றாகும். இதுவும் பரபரப்பான தொகுதியாகும். ஒவ்வொரு முறை தேர்தலிலும், நாட்டின் கவனத்தை ஈர்க்கிறது. இதற்கு இரண்டு பிரபலமான தலைவர்களே காரணம்.
33 ஆண்டுகள்
ஷிவமொகாவில் முன்னாள் முதல்வர்கள் பங்காரப்பா, எடியூரப்பா குடும்பத்தினர் பிரபலமானவர்கள். 33 ஆண்டுகளாக இவர்களே, அரசியல் ரீதியில் எதிராளிகளாக மோதுகின்றனர்.
கடந்த 1991 லோக்சபா தேர்தலில், பா.ஜ., சார்பில் எடியூரப்பாவும், காங்கிரஸ் சார்பில் பங்காரப்பாவின் நெருங்கிய உறவினர் சிவப்பாவும் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் எடியூரப்பா தோற்றார். 2005ல் இங்கு நடந்த இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டு, பங்காரப்பா வெற்றி பெற்றார்.
அடுத்து 2009ல் நடந்த தேர்தலில் இங்கு காங்., சார்பில் பங்காரப்பாவும், பா.ஜ.,வில் எடியூரப்பாவும் நேரடியாக மோதினர். இதில், எடியூரப்பா வெற்றி பெற்று, ஷிவமொகாவை தன் பிடிக்குள் கொண்டு வந்தார். 2014ல் இவரை எதிர்த்து ம.ஜ.த., வேட்பாளராக போட்டியிட்ட, பங்காரப்பாவின் மகள் கீதா மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
எடியூரப்பா மாநில முதல்வரானதால், தன் எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். இதனால், 2018ல் நடந்த இடைத்தேர்தல், 2019ல் நடந்த பொது தேர்தலில் எடியூரப்பாவின் மூத்த மகன் ராகவேந்திரா இங்கு நின்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து, ம.ஜ.த., சார்பில் போட்டியிட்ட பங்காரப்பாவின் மகன் மது பங்காரப்பா இரு முறையும் தோல்வியடைந்தார்.
இம்முறையும் ராகவேந்திராவும், காங்., சார்பில் கீதா சிவராஜ்குமாரும் களத்தில் உள்ளனர். தன் சகோதரி கீதாவுக்கு ஆதரவாக, தற்போது மாநில அமைச்சராக உள்ள மது பங்காரப்பா களம் இறங்கியுள்ளார். எடியூரப்பா குடும்பத்தின் பிடியில் உள்ள ஷிவமொகாவை மீட்க வேண்டும் என கங்கணம் கட்டி தேர்தல் பணியாற்றினார். கீதாவுக்கு ஆதரவாக அவரது கணவரும், பிரபல நடிகருமான சிவராஜ்குமாரும் தீவிர பிரசராத்தில் ஈடுபட்டார்.
ராகவேந்திரா தரப்பு, பா.ஜ., மோடி அலையையும், காங்கிரஸ் தரப்பு வாக்குறுதி திட்டங்களையும் நம்பியுள்ளன. பெரும் வெற்றியை இரு தரப்புமே எதிர்பார்க்கிறது. முந்தைய தேர்தல்களில் பா.ஜ., காங்கிரஸ் இடையே நேரடி போட்டி இருந்தது. ஆனால், இம்முறை ஈஸ்வரப்பா, சுயேச்சை வேட்பாளராக களத்தில் நிற்பதால், மும்முனை போட்டி எழுந்துள்ளது. இதனால், ஓட்டுகள் பிரியுமோ இரண்டு தேசிய கட்சிகளும் கிலியில் உள்ளன.
அதிகபட்ச முயற்சி
இந்த தேர்தலில் ராகவேந்திரா வெற்றி பெற்றால், ஷிவமொகா மாவட்டம் எடியூரப்பா குடும்பத்தின் கைப்பிடியில் இருக்கும். ஒருவேளை கீதா வெற்றி பெற்றால், பங்காரப்பா குடும்பத்தினரின் பலம் அதிகரிக்கும். எனவே இரண்டு கட்சியினரும், தொகுதியை கைப்பற்ற அதிகபட்சமாக முயற்சிக்கின்றனர்.
யாருடைய கை ஓங்கும் என, எடியூரப்பா, பங்காரப்பா ஆதரவாளர்கள் ஆவலோடு தேர்தல் முடிவை எதிர்பார்க்கின்றனர். இவர்களுக்கு நடுவில், ஈஸ்வரப்பா நானே வெற்றி பெறுவேன் என, நம்பிக்கையுடன் கூறுகிறார்- நமது நிருபர் -.