ADDED : ஏப் 04, 2024 10:45 PM

துமகூரு- ''என்னை தோற்கடிப்பதற்காக லோக்சபா தேர்தலில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அமைத்துள்ளது,'' என, காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் விளக்கம் அளித்து உள்ளார்.
பெங்களூரு ரூரல் காங்கிரஸ் எம்.பி., சுரேஷ், துமகூரில் நேற்று அளித்த பேட்டி:
கர்நாடகாவின் வளர்ச்சிக்காகவும், விவசாயிகள் முன்னேற்றத்திற்காகவும் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அமைக்கவில்லை. பெங்களூரு ரூரலில் என்னை தோற்கடிக்க வேண்டும் என்பதே அவர்கள் விருப்பம். என்னை எதிர்த்து போட்டியிடும் மஞ்சுநாத், ம.ஜ.த., தலைவர் தேவகவுடாவின் மருமகன். அவர் ஏன் பா.ஜ.,வில் இணைந்தார். எல்லாம் எனக்கு எதிரான சதி.
மூன்று முறை எம்.பி.,யாக இருந்து உள்ளேன். எனது தொகுதி மக்களுடன் தொடர்பில் இருக்கிறேன். மேகதாதுவில் அணை கட்டுவதற்காக காங்கிரஸ் போராட்டம் நடத்திய போது, மவுனமாக இருந்த தேவகவுடா, தேர்தல் நேரத்தில் மேகதாது பற்றி பேசுகிறார்.
இத்திட்டம் கனகபுரா மக்களுக்கானது இல்லை. பெங்களூரு குடிநீர் தேவையை நிறைவேற்றும் திட்டம். அந்த திட்டத்திற்காக கனகபுரா மக்கள் தங்கள் நிலங்களை தியாகம் செய்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

