பாதிக்கப்பட்ட 9 பெண்களிடம் எஸ்.ஐ.டி., விசாரணை 'பென்டிரைவ்' வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?
பாதிக்கப்பட்ட 9 பெண்களிடம் எஸ்.ஐ.டி., விசாரணை 'பென்டிரைவ்' வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?
ADDED : மே 09, 2024 05:31 AM

பெங்களூரு : எம்.பி., பிரஜ்வலால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும், இரண்டு அரசு ஊழியர்கள் உட்பட 9 பெண்களிடம், எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று விசாரணை நடத்தியது.
ஹாசன் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33. இவரது ஆபாச வீடியோ வழக்கு குறித்து, எஸ்.ஐ.டி., விசாரித்து வருகிறது. தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளார். மூன்று சம்மன் அனுப்பியும், இன்னும் ஆஜராகவில்லை. விசாரணைக்கு ஆஜராக ஏழு நாட்கள் அவகாசம் கேட்டிருந்தார். அதுவும் நேற்றுடன் முடிந்தது.
சந்திப்பு
பிரஜ்வல் இருப்பிடம், அவரை பற்றிய தகவலை அறிய இன்டர்போல் மூலம், 196 நாடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதற்கிடையில் ம.ஜ.த., பெண் பிரமுகர் அளித்த புகாரின்பேரில், பிரஜ்வல் மீது பலாத்கார வழக்கும் பதிவாகி உள்ளது.
சமூக வலைத்தளங்களில் வெளியான ஆபாச வீடியோக்களில் இருக்கும் பெண்களை கண்டறிய எஸ்.ஐ.டி., நடவடிக்கை எடுத்து வந்தது. இந்த நிலையில், பிரஜ்வலால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும், இரண்டு அரசு ஊழியர்கள் உட்பட ஒன்பது பெண்களிடம் எஸ்.ஐ.டி., நேற்று விசாரணை நடத்தியது.
'பணியிட மாற்றம் தொடர்பாக, எம்.பி., பிரஜ்வலை சந்தித்தோம். உதவி செய்வதாகக் கூறி, எங்களை பயன்படுத்திக் கொண்டு, வீடியோ எடுத்தார்' என, இரண்டு பெண் அரசு ஊழியர்களும், எஸ்.ஐ.டி.,யிடம் கூறியதாக, தகவல் வெளியாகி உள்ளது.
முன்ஜாமின் மறுப்பு
பிரஜ்வல் ஆபாச வீடியோக்கள் அடங்கிய 'பென்டிரைவ்' வெளியிட்டதாக, ஹாசன் சைபர் கிரைம் போலீசில், ம.ஜ.த., புகார் அளித்தது. அதன்பேரில் கார் டிரைவர் கார்த்திக், காங்கிரஸ் பிரமுகர்கள் புட்டராஜ், நவீன்கவுடா, சேத்தன், சரத் ஆகியோர் மீது வழக்குப்பதிவானது. இவர்கள் இன்னும் கைது ஆகவில்லை. கைது பயத்தில், ஹாசன் 3வது கூடுதல் நீதிமன்றத்தில், முன்ஜாமின் கேட்டு இவர்கள் மனு செய்தனர். அந்த மனு மீது நேற்று விசாரணை நடந்தது.
முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி மமதா உத்தரவிட்டார்.
தலையீடு இல்லை
சிறப்பு புலனாய்வு குழு, இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்கிறது. நேர்மையான அதிகாரி பிரிஜேஷ்குமார் சிங் தலைமையில் விசாரணை நடக்கிறது. பிரஜ்வலை அழைத்து வர, சி.பி.ஐ., மூலம், இன்டர்போல் உதவியை நாடினோம்.
பிரஜ்வல் இங்கு வராமல் இந்த வழக்கில் விரைவான விசாரணை நடப்பது கடினம். இந்த வழக்கில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், எனது தலையீடு இல்லை. குமாரசாமி முதல்வராக இருந்தபோது, ஒரு வழக்கு கூட சி.பி.ஐ., விசாரணைக்கு செல்லவில்லை.
பரமேஸ்வர், உள்துறை அமைச்சர்
3 பெண்கள் தற்கொலை?
பிரஜ்வல் ஆபாச வீடியோ வெளியான வழக்கில், மிக பெரிய சதி உள்ளது. முன்னாள் எம்.பி., சிவராமேகவுடா, காங்கிரஸ் தலைவர் ஒருவரிடம், 5 கோடி ரூபாய் வாங்கி உள்ளார். இதுபற்றி எங்களுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்தது.
பென்டிரைவில் இருக்கும் ஆபாச வீடியோக்கள் வெளியானதால், சில குடும்பங்களில் பிரச்னை ஏற்பட்டு உள்ளது. வீடியோ வெளியான பின்னர், மூன்று பெண்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும், எனக்கு தகவல் கிடைத்தது. இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும்.
சுரேஷ்கவுடா, ம.ஜ.த., முன்னாள் எம்.எல்.ஏ.,
நாகமங்களா, மாண்டியா
புகைப்படம் எடுப்பது தவறா?
பிரஜ்வலின் முன்னாள் டிரைவர் கார்த்திக், என்னுடன் எடுத்துக் கொண்ட, புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு, கார்த்திக் என்னை சந்தித்தார். ரேவண்ணா குடும்பத்தால் பாதிக்கப்பட்டு உள்ளேன். எனக்கு உதவுங்கள் என்று கூறினார். ஆனாலும் நான் கண்டுகொள்ளவில்லை. அதன்பின்னர் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அரசியல் தலைவர்களுடன், மக்கள் புகைப்படம் எடுப்பது சாதாரண விஷயம். கார்த்திக் என்னுடன் புகைப்படம் எடுத்தது தவறா?
ஸ்ரேயஷ் படேல், காங்கிரஸ் வேட்பாளர், ஹாசன் லோக்சபா தொகுதி