சித்தராமையா விலக மறுப்பது ஏன்? பா.ஜ., ரமேஷ் ஜிகஜினகி கேள்வி!
சித்தராமையா விலக மறுப்பது ஏன்? பா.ஜ., ரமேஷ் ஜிகஜினகி கேள்வி!
ADDED : செப் 09, 2024 04:37 AM

விஜயபுரா : ''தன் மீது குற்றச்சாட்டு எழுந்தவுடன், சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருந்தால், அவரது பெயர் வரலாற்றில் நிலைத்திருக்கும். ஆனாலும், அதிகாரத்தில் ஒட்டி கொண்டிருக்கிறார்,'' என பா.ஜ., - எம்.பி., ரமேஷ் ஜிகஜினகி தெரிவித்தார்.
விஜயபுராவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
முதல்வர் சித்தராமையா மீது, மூடா வழக்கு மட்டுமின்றி, மேலும் பல வழக்குகள் உள்ளன. என்ன வழக்கு என்பது எனக்கு தெரியாது.
அவரது கட்சியினரே விஷயத்தை, வெளிச்சத்துக்கு கொண்டு வருகின்றனர். இதில் பா.ஜ.,வின் பங்களிப்பு எதுவும் இல்லை. அவரது கட்சியினர் கூறும் தகவல்களை, நாங்கள் அரசியல் அஸ்திரமாக பயன்படுத்துகிறோம்.
மூடா முறைகேட்டில், அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது உண்மை. எனவே தான் முதல்வரை ராஜினாமா செய்ய சொல்கிறோம். தனிப்பட்ட முறையில் சித்தராமையா, நல்ல மனிதர். அவர் மீது எங்களுக்கு நல்ல அபிப்ராயம் உள்ளது.
இதற்கு முன் தொலைபேசி ஒட்டு கேட்பு குற்றச்சாட்டு எழுந்த போது, ராமகிருஷ்ண ஹெக்டே ராஜினாமா செய்தார். இன்றைக்கும் அவரை பற்றி பேசுகிறோம்.
அடுத்த 50 ஆண்டுகளுக்கு அவரது பெயர் நிலைத்திருக்கும். அதேபோன்று தன் மீது குற்றச்சாட்டு எழுந்தவுடன், சித்தராமையாவும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருந்தால், அவரது பெயரும் நிலைத்திருக்கும்.
ஆனால், அதிகாரத்தில் ஒட்டி கொண்டிருக்கிறார். தான் தவறு செய்யவில்லை என்கிறார். ஆனால் நாளை நீதிமன்றம் சொல்லுமே.
முதல்வர் பதவிக்கு, துணை முதல்வர் சிவகுமாரின் பெயர் உள்ளது. ஆனால், அவரை மூலையில் அமர்த்தியுள்ளனர். முதல்வர் பதவிக்கு யாருமே, இவரது பெயரை கூறவில்லை. எம்.பி.பாட்டீல் உட்பட, பலரும் தாங்களே முதல்வர் ஆக வேண்டும் என்கின்றனர்.
இதன் மூலம் காங்., ஒற்றுமை எப்படிப்பட்டது என்பதை உணர்த்துகிறது. மல்லிகார்ஜன கார்கே, பரமேஸ்வர், சதீஷ் ஜார்கிஹோளி என, பலரும் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகின்றனர்.
விஜயபுரா, இன்டி நகரில் தேசிய நெடுஞ்சாலை அமைக்க, பூமி பூஜை நடக்கிறது. 102 கி.மீ., தொலைவிலான நெடுஞ்சாலை இதுவாகும். மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலை அமைப்பதில் ஆர்வம் காண்பிக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் 1,000 கி.மீ., நெடுஞ்சாலை அமைத்துள்ளது. இதற்காக 5,766 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.