குமாரசாமியை கண்டிக்காதது ஏன்? பா.ஜ.,வுக்கு சிவகுமார் கேள்வி!
குமாரசாமியை கண்டிக்காதது ஏன்? பா.ஜ.,வுக்கு சிவகுமார் கேள்வி!
ADDED : ஏப் 17, 2024 06:15 AM

பெங்களூரு, : ''வாக்குறுதி திட்டங்களால், கிராம பெண்கள் வழிதவறி போகின்றனர் என்று, குமாரசாமி கூறினார். இதற்கு பா.ஜ., தலைவர்கள் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை,'' என்று, துணை முதல்வர் சிவகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
முன்னாள் முதல்வர் குமாரசாமி, என்னை தனிப்பட்ட முறையில் விமர்சித்து வருகிறார். பாறை, பாறை உடைப்பவர், கழுத்தை அறுப்பவர், விஷம் கொடுப்பவர் என்று கூறுகிறார். இப்படி பேசுவது அவருக்கு மரியாதை தராது.
அனைத்திற்கும் ஒரு எல்லை உண்டு. அதை அவர் மறந்து விட வேண்டாம். எனது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு, எனது நிலத்தில் இருந்த பாறைகளை உடைத்து விற்றேன். என் நிலத்தில் இருந்த பாறையை உடைத்தால், குமாரசாமிக்கு என்ன பிரச்னை.
எந்த பெண்ணையும் மிரட்டி சொத்தை நான் பறிக்கவில்லை. வாக்குறுதி திட்டங்களால், கிராம பெண்கள் வழிதவறி போகின்றனர் என்று, குமாரசாமி கூறினார். இதற்கு பா.ஜ., தலைவர்கள் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை. கூட்டணியில் இருப்பதால் குமாரசாமி என்ன பேசினாலும் சரி என்று, அவர்கள் நினைக்கின்றனரா. குமாரசாமியின் கருத்து பெண்களின் சுயமரியாதைக்கு உட்பட்ட விஷயம்.
பெங்களூரில் குடிநீர் பிரச்னை இருந்தாலும், நகர மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்கிறோம். இதை பா.ஜ.,வினரால் பொறுத்து கொள்ள முடியவில்லை. சிவகுமார் ஒக்கலிக தலைவர் இல்லை என்று, எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறி உள்ளார். ஆமாம், நான் தலைவன் இல்லை. அசோக் தான் எதிர்க்கட்சி தலைவர். எப்போதாவது நான் தலைவன் என்று, யாரிடமாவது கூறினேனா.
இவ்வாறு அவர் கூறினார்.

