ADDED : ஆக 27, 2024 01:18 AM
புதுடில்லி: மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் பெண் டாக்டர் கொடூரமாக கொல்லப்பட்டதை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருந்தார்.
அதில், 'நாடு முழுதும் நாள்தோறும் 90 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகின்றன. இதைத் தடுக்க கடுமையான சட்டங்களை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்.
இந்த வழக்குகள் சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் வாயிலாக விசாரிக்கப்பட்டு, 15 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்' என, வலியுறுத்தியிருந்தார்.
இந்த கடிதத்துக்கு, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி பதிலளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:
சமீபத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா சட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனையை பரிந்துரைக்கிறது.
கடந்த ஜூன் 30ம் தேதி நிலவரப்படி, நாடு முழுதும் 409 போக்சோ நீதிமன்றங்கள் உட்பட 753 சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. இந்த நீதிமன்றங்கள் வாயிலாக 2.53 லட்சம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு உள்ளன.
இது போன்ற நீதிமன்றங்களை அமைப்பதற்கான திட்டத்தின் வாயிலாக, மேற்கு வங்கத்தில் ஒருங்கிணைந்த பாலியல் குற்றங்களை விசாரிக்கும் 103 நீதிமன்றங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இருப்பினும், 2023 ஜூன் வரை சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் எதுவும் அங்கு செயல்படவில்லை. ஏழு விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க தயாராக இருப்பதாக மேற்கு வங்க அரசு விருப்பம் தெரிவித்தது. இவற்றில் ஆறு மட்டுமே தற்போது செயல்படுகின்றன.
மேற்கு வங்கத்தில் 48,600 பாலியல் பலாத்காரம் மற்றும் போக்சோ வழக்குகள் நிலுவையில் இருந்தும், இது தொடர்பாக மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.