ஆன்லைன் சினிமா டிக்கெட்டுக்கு வரி எதற்கு? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
ஆன்லைன் சினிமா டிக்கெட்டுக்கு வரி எதற்கு? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
ADDED : ஜூலை 31, 2024 02:34 AM
புதுடில்லி, ஆன்லைன் வாயிலாக சினிமா டிக்கெட் வாங்குவதற்கான கூடுதல் கட்டணத்துக்கு, தமிழக அரசு கேளிக்கை வரி விதிக்க முடியாது என, உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
நேரில் செல்லாமலேயே, ஆன்லைன் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி, பெரும்பாலான சினிமா தியேட்டர்களில் உள்ளது. இதற்கு, தியேட்டர்கள் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கின்றன. இந்த கூடுதல் கட்டணத்துக்கும், கேளிக்கை வரி செலுத்த வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கூடுதல் கட்டணத்துக்கு தமிழக அரசு கேளிக்கை வரியை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.வி. நாகரத்தினா, கே.கோடீஸ்வர் சிங் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு தன் உத்தரவில் கூறியுள்ளதாவது:
ஒருவர் தியேட்டருக்கு நேரடியாக செல்லாமல், ஆன்லைன் வாயிலாக டிக்கெட் வாங்குகிறார். நேரடியாக சென்றால், அதற்கு நேரம், செலவு ஆகும். அதைத் தவிர்ப்பதற்காகவே, ஆன்லைன் வாயிலாக வாங்குகின்றனர். இதில் தமிழக அரசின் பங்களிப்பு என்ன உள்ளது?
நான் வீட்டில் இருந்து டிக்கெட் வாங்குவதற்கான கட்டணத்தை தியேட்டர்கள் வசூலிக்கின்றன. இதில், கேளிக்கை வரிக்கு எங்கே வருகிறது?
தமிழக கேளிக்கை வரிச் சட்டம் - 1939ன்படி, இந்த கூடுதல் கட்டணத்துக்கு கேளிக்கை வரியை தமிழக அரசு வசூலிக்க முடியாது.
இந்த விஷயத்தில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் தலையிட விரும்பவில்லை. அதனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

