45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை ஏன்?: பிரியங்கா கேள்வி
45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை ஏன்?: பிரியங்கா கேள்வி
ADDED : மே 26, 2024 03:30 PM

சண்டிகர்: 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை ஏன்? என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கேள்வி எழுப்பி உள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பதேகர் சாஹிப்பில் நடந்த நிகழ்ச்சியில் பிரியங்கா பேசியதாவது: உங்கள் வாழ்க்கைப் போராட்டங்களை நினைவில் வையுங்கள். பா.ஜ., அமல்படுத்த நினைக்கும் சட்டங்கள் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். ஹிமாச்சல பிரதேச விவசாயிகளுக்கு என்ன செய்தார்கள்?. நாங்கள் ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடுகிறோம். இந்தப் போரில் நிச்சயம் வெற்றி பெறுவோம்
அவமரியாதை
நரேந்திர மோடி பொதுமக்களை அவமரியாதை செய்துள்ளார். தேர்தல் மேடைகளில் பொதுப் பிரச்னைகளைப் பேசுவதில்லை. இன்று காங்கிரஸ் கட்சிதான் மக்கள் பிரச்னை பற்றி பேசுகிறது. மக்களின் குரலுக்கு செவிசாய்ப்பதற்காக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடந்தே ராகுல் சென்றார். பின்னர் மணிப்பூரில் இருந்து மஹாராஷ்டிரா வரை சென்றார். மக்களுக்காக அரசு இயங்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் கொள்கையாக இருந்து வருகிறது.
ரூ.16 லட்சம்
பிரதமர் மோடி மேடைகளில் நாடு முன்னேறுகிறது, பொருளாதாரம் வலுவடைகிறது என பேசுகிறார். ஆனால் கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பது ஏன்?. நாட்டில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை ஏன்?. பணவீக்கம் ஏன் இவ்வளவு அதிகமாகிறது?. நரேந்திர மோடி தனது கோடீஸ்வர நண்பர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தார்.
பணவீக்கம்
ஆனால், பொது மக்களுக்கான திட்டத்தை கொண்டு வரும்போது, நாட்டில் பணம் இல்லை, பொருளாதாரம் ஸ்தம்பித்துவிடும் என்கிறார்கள். தேர்தலில் சிந்தித்து ஓட்டளிக்க வேண்டும். தேர்தல் நாளில் ஓட்டளிக்க செல்லும் போது, பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் நீங்கள் போராடும் உங்கள் வாழ்க்கைப் போராட்டங்களை நினைவில் கொள்ளுங்கள். கடினமாக உழைத்தாலும், மக்களால் தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.