ADDED : நவ 13, 2025 01:30 AM

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள போலீசார், தடை செய்யப்பட்ட ஜமாத் - இ - இஸ்லாமி பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய, 300க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.
டில்லி செங்கோட்டை அருகே, கடந்த 10ம் தேதி மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின், ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
தடை செய்யப்பட்ட ஜமாத் - இ - இஸ்லாமி பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீண்டும் செயல்பட துவங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்களின் இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
ஜமாத் - இ - இஸ்லாமி அமைப்புடன் தொடர்புடையவர்கள் வேறு பெயர்களில் மீண்டும் தங்கள் செயல்பாடுகளை துவக்க முயற்சிக்கின்றனர் என்ற தகவல் கிடைத்ததால், இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் மட்டும், 200-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்றன. கடந்த நான்கு நாட்களில், ஜம்மு- - காஷ்மீரில், 400-க்கும் மேற்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கைகள் நடந்தன.
இதில், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் நேரடி தொடர்புடைய ஆவணங்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜம்மு - -காஷ்மீர் நேஷனல்ஸ் ஆப்பரேட்டிங் பாகிஸ்தான் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய, 500-க்கும் மேற்பட்ட நபர்கள் விசாரணைக்காக அழைக்கப்பட்டனர்.
இவர்களில் பலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனந்த்நாக் மாவட்ட சிறையில் வைக்கப் பட்டுள்ளனர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.

