வாடகைதாரர்கள் சொத்துரிமை கோருவதா? முக்கிய தீர்ப்பை வழங்கியது உச்ச நீதிமன்றம்
வாடகைதாரர்கள் சொத்துரிமை கோருவதா? முக்கிய தீர்ப்பை வழங்கியது உச்ச நீதிமன்றம்
ADDED : நவ 13, 2025 12:04 AM
புதுடில்லி: 'பல ஆண்டுகளாக தங்கி இருந்தாலும், வாடகை சொத்து மீது வாடகைதாரர்கள் உரிமை கொண்டாட முடியாது' என, மிக முக்கியமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது.
டில்லியை சேர்ந்த ஜோதி சர்மா என்பவரின் மாமனார் ராம்ஜி தாஸ், தனக்கு சொந்தமான கடையை, 1953ல் வாடகைக்கு விட்டார்.
அவர் மறைந்த பின், அந்த சொத்து மருமகள் ஜோதி சர்மா பெயருக்கு மாறியது. இதையடுத்து, இனிப்பு மற்றும் பலகாரங்கள் விற்கும் தொழிலை விரிவுப்படுத்த கடையை காலி செய்யும்படி வாடகைதாரரை ஜோதி கேட்டுள்ளார்.
இதற்கு வாடகைதாரர் விஷ்ணு கோயல் எதிர்ப்பு தெரிவித்ததுடன், ராம்ஜி தாஸ் மருமகள் பெயரில் எழுதிய உயில் போலியானது என குற்றஞ்சாட்டினார்.
தவிர, 30 ஆண்டுகளாக அந்த கடையை நடத்தி வருவதாகவும், 1980ல் வாடகை தருவதை நிறுத்திய பிறகும், நில உரிமையாளர் தனக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அனுபவத்தில் அந்த சொத்து உரிமை தனக்கே சேரும் எனவும் டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த, 1963ல் வகுக்கப்பட்ட வரைமுறை சட்டத்தின் அடிப்படையில், 12 ஆண்டுகள் வரை ஒரு சொத்தை வெளிப்படையாக ஒருவர் ஆக்கிரமித்து வைத்திருந்தால், அது ஆக்கிரமித்தவருக்கே சொந்தம்.
தவறான முடிவு அந்த சட்டத்தின் அடிப்படையில், டில்லி உயர் நீதிமன்றம் விஷ்ணு கோயலுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. இதனால் மனம் உடைந்த ஜோதி சர்மா, உச்ச நீதிமன்றத்தை நாடினார்.
இருதரப்பு வாதங்கள், சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள், முந்தைய தீர்ப்புகள் அனைத்தையும் ஆராய்ந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் கே.வினோத் சந்திரன் அமர்வு அளித்த தீர்ப்பின் விபரம்:
வாடகை என்பது நில உரிமையாளரின் அனுமதியின் பேரில் விடப்படுவது. நில உரிமையாளரின் ஒப்பதலுடன் தான் வாடகைதாரர் அந்த இடத்தை பயன்படுத்துகிறார்.
அதனால், அதை ஆக்கிரமிப்பு என வகைப்படுத்த முடியாது. மேலும், ஆண்டு கணக்கில் வாடகை இடத்தில் வசிப்பதால் மட்டும், வாடகைதாரர் அந்த சொத்தின் உரிமையாளராக மாறிவிட முடியாது.
இவ்வழக்கில் விசாரணை நீதிமன்றங்கள் எடுத்த முடிவுகள் தவறானவை. ஆதாரங்களுடன் ஒத்துப் போகவில்லை. 1953ல் ராம்ஜி தாசுடன் மேற்கொள்ளப்பட்ட குத்தகை ஒப்பந்தத்தின்படி, வாடகைதாரர்கள், தொடர்ந்து அவருக்கும், அவரது வாரிசுகளுக்கும் வாடகை செலுத்தி வந்துள்ளனர்.
இதன் மூலம், உரிமையாளர் - வாடகைதாரர் என்ற உறவு இருந்தது உறுதியாகியுள்ளது.
வாடகை அல்லது குத்தகை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு விட்டாலே, சம்பந்தப்பட்ட நில உரிமையாளரின் உரிமைகளுக்கு எதிராக ஆட்சேபனை தெரிவிக்கவோ, எதிர்க்கவோ முடியாது.
6 மாதங்கள் அவகாசம் அந்த வகையில், சம்பந்தப்பட்ட உயில் உண்மையானது தானா என சந்தேகம் எழுப்புவதற்கான முகாந்திரம் வாடகைதாரருக்கு கிடையாது.
நீண்ட காலமாக வாடகை செலுத்தி வந்ததை கருத்தில் கொண்டு, வாடகைதாரர், கடையை காலி செய்ய ஆறு மாதங்கள் அவகாசம் தரப்படுகிறது. அதற்குள், நிலுவையில் உள்ள வாடகை பணத்தையும் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

