செங்கோட்டை கார் வெடிப்பு சம்பவம்... பயங்கரவாதம் தான்!: அதிகாரப்பூர்வமாக அறிவித்தது மத்திய அரசு
செங்கோட்டை கார் வெடிப்பு சம்பவம்... பயங்கரவாதம் தான்!: அதிகாரப்பூர்வமாக அறிவித்தது மத்திய அரசு
ADDED : நவ 13, 2025 12:00 AM

புதுடில்லி: டில்லி செங்கோட்டையில் காரை வெடிக்கச் செய்து, 12 பேர் உயிரிழக்க காரணமான சம்பவத்தை கொடூரமான பயங்கரவாத தாக்குதல் என, மத்திய அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த பாதுகாப்பு விவகாரங்களுக்கான உயர்மட்ட அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, உயிரிழந்தோருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைக்கு பழி தீர்க்கும் விதமாக, நம் நாட்டில் தாக்குதல் நடத்த, ஜெய்ஷ் - இ - முகமது மற்றும் அன்சர் கஸ்வாதுல்ஹிந்த் என்ற பயங்கரவாத அமைப்புகள் சதித் திட்டம் தீட்டி வருவதாக உளவுத்துறை எச்சரித்தது.
அதே வேளையில், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பை ஆதரித்து, ஜம்மு - காஷ்மீரில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டன. அதை ஒட்டிய அம்மாநிலத்தின் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் ஆதிலை கைது செய்தபோது, அவர்கள் மிகப் பெரிய தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியிருந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.
ஜம்மு - காஷ்மீர், உத்தர பிரதேசம் மற்றும் ஹரியானாவில் இருந்து, 2900 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் டாக்டர் ஆதில் கொடுத்த தகவலின் அடிப்படையில், ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் முஸாம்மில் அகமதை, உத்தர பிரதேசத்தின் ஷஹரன்பூரில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
மேலும், இரு டாக்டர்களுடன் தொடர்பில் இருந்த லக்னோவைச் சேர்ந்த பெண் டாக்டர் ஷாஹீன் சயீதும் கைது செய்யப்பட்டார். இவர்கள் மூவரும், ஹரியானாவின் அல் பலாஹ் மருத்துவ பல்கலையில் பணியாற்றியவர்கள் என தெரிந்தது.
இதே பல்கலையைச் சேர்ந்த நான்காவது டாக்டர் உமருக்கும் இவர்களுடன் தொடர்பு இருப்பது தெரிந்து, அவரை போலீசார் தேடி வந்த நிலையில், டில்லியில் வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட காரை ஓட்டிச் சென்று அவர் வெடிக்க வைத்தார்.
இதில், 13 பேர் உயிரிழந்த இந்த சம்பவம், நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பூட்டானில் இருந்து பிரதமர் மோடி நேற்று நாடு திரும்பியதும், நேரடியாக மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். அதன்பின், பிரதமர் தலைமையில், பாதுகாப்பு விவகாரங்களுக்கான உயர்மட்ட அமைச்சரவை கூட்டம் கூடியது.
இதில் நம் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டம் துவங்குவதற்கு முன், பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன் பின் நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விபரம்:
டில்லி செங்கோட்டை அருகே கடந்த, 10ம் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவம் கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது போன்ற பயங்கரவாத செயல்களை நாம் ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. இந்த நிலைப்பாட்டில் எப்போதும் உறுதியுடன் உள்ளோம்.
தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். உரிய நேரத்தில், விரைவாக வந்து உதவிய டாக்டர்கள், பாதுகாப்பு படையினருக்கு நன்றி. கடினமான நேரத்தில் உறுதுணையாக நின்ற அனைத்து நாடுகளுக்கும் நன்றி.
இந்த கொடூர தாக்குதலை நிகழ்த்திய பயங்கரவாதிகளுக்கு உரிய பாடம் புகட்டப்படும். அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுத்தருவது உறுதி.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

