மனைவி வேறு நபரை காதலிப்பது கள்ளக்காதல் அல்ல: ம.பி., ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
மனைவி வேறு நபரை காதலிப்பது கள்ளக்காதல் அல்ல: ம.பி., ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
ADDED : பிப் 14, 2025 11:41 PM

போபால்: 'மனைவி வேறு ஆணுடன் உடலுறவு இல்லாமல் காதலில் இருப்பது, கள்ளக்காதல் என்று கூற முடியாது' என உத்தரவிட்டுள்ள மத்திய பிரதேச உயர் நீதிமன்றம், 'வேறொரு ஆணுடன் மனைவி கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார் என கூறி, பராமரிப்பு தொகையை தர, கணவர் மறுக்க முடியாது' என, உத்தரவிட்டு உள்ளது.
பராமரிப்பு தொகை
மத்திய பிரதேச மருத்துவமனை ஒன்றில், வார்டு பாயாக, மாதம், 8,000 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றும் கணவர், விவாகரத்தான தன் மனைவிக்கு மாதந்தோறும் அளித்து வரும் பராமரிப்பு தொகையை தொடர்ந்து வழங்க முடியாது என, குடும்ப நீதிமன்றத்தில் முறையிட்டார். அதற்காக, 'என் மனைவி வேறொரு ஆணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் மாதம், 4,000 ரூபாய் பராமரிப்பு தொகையே அதிகம். அந்த தொகையை வழங்கவே கஷ்டப்படுகிறேன்.
'எனவே, பராமரிப்பு தொகையை தொடர்ந்து வழங்குவதை நிறுத்த உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார். அந்த மனு, குடும்ப நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து, மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில், அவர் மேல் முறையீடு செய்தார்.
மறுக்க முடியாது
அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.எஸ்.அலுவாலியா, கடந்த மாதம் 17ல் பிறப்பித்த உத்தரவு:
கள்ளக்காதல் என்றாலே அந்த பெண், வேறொரு ஆணுடன் உடல் உறவில் ஈடுபட்டு வருகிறார் என்பதாகத் தான் பொருள். ஆனால், இந்த வழக்கை பொறுத்தவரை, இன்னொரு நபருடன் அந்த பெண் மனதளவில் அன்பு கொண்டுள்ளார் என்பது தான் தெரிகிறது.
அந்த ஆணுடன், இந்த நபரின் மனைவி உடல் உறவில் ஈடுபடவில்லை. அவ்வாறு ஈடுபட்டுள்ளார் என்பதை நிரூபிக்க, அவர் கணவர் போதிய ஆதாரங்களை வழங்கவில்லை.
எனவே, கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார் என்று கூறி, மனைவிக்கு மாதந் தோறும் கொடுத்து வரும் பராமரிப்பு தொகையை கொடுக்க, அந்த கணவர் மறுக்க முடியாது.
அந்த தொகையை, அந்த கணவர், தன் மனைவிக்கு கொடுக்கவே வேண்டும். இதுகுறித்து, குடும்ப நல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, இந்த நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. அந்த கணவரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம்.
அதுபோல, அந்த கணவர் அளித்துள்ள சான்றுகளின் படி, அவருக்கு மாதம் கிடைக்கும், 8,000 ரூபாய் போதுமானதாக இல்லை என்பதையும், அவரின் மனைவி பியூட்டி பார்லர் நடத்தி, போதுமான அளவு சம்பாதிக்கிறார் என்பதையும், ஆதாரங்களுடன் நிரூபிக்க கணவர் தவறி விட்டார்.
இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.