பா.ஜ., - ம.ஜ.த., எம்.எல்.ஏ.,க்கள் 30 பேர் காங்கிரசில் இணைவரா?
பா.ஜ., - ம.ஜ.த., எம்.எல்.ஏ.,க்கள் 30 பேர் காங்கிரசில் இணைவரா?
ADDED : மே 17, 2024 10:57 PM

சித்ரதுர்கா: ''பா.ஜ., - ம.ஜ.த., எம்.எல்.ஏ.,க்கள் 30 பேர், விரைவில் காங்கிரசில் இணைவர்,'' என்று, அமைச்சர் டி.சுதாகர் 'பகீர்' தகவல் கூறினார்.
புள்ளியல் அமைச்சர் டி.சுதாகர் சித்ரதுர்காவில் நேற்று அளித்த பேட்டி:
லோக்சபா தேர்தலுக்கு பின்பு, காங்கிரஸ் ஆட்சி கவிழும் என்று, பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் கூறுகின்றனர். முற்றிலும் பொய். தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், பா.ஜ., - ம.ஜ.த., எம்.எல்.ஏ.,க்கள் 30 பேர், காங்கிரசில் இணைவர். அதன் மூலம், காங்கிரஸ் அரசு மேலும் வலுவடையும். மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதாக, ஜெகதீஷ் ஷெட்டர் கூறுகிறார்.
நான் முன்பு பா.ஜ.,வில் இருந்தேன். பா.ஜ., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு எப்படி இருந்தது என்று, எனக்கு நன்றாக தெரியும். எம்.பி., பிரஜ்வல் வழக்கை விசாரிக்கும், சிறப்பு புலனாய்வு குழு சுதந்திரமான விசாரணை அமைப்பு. அந்த குழுவுக்கு அரசு, முழு சுதந்திரம் அளித்து உள்ளது. அந்த குழுவில் இருப்பவர்கள், திறமையான அதிகாரிகள்.
இவ்வழக்கில் கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு ஒத்துழைப்பு தரவில்லை. மத்திய அரசு மனது வைத்தால், பிரஜ்வலை ஒரு நிமிடத்தில் கைது செய்யலாம். அவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்தாலே போதும். அதை செய்ய மறுக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

