ADDED : மார் 26, 2024 09:39 PM
பெங்களூரு : கர்நாடகாவில், கடந்த நான்கு லோக்சபா தேர்தல்களில் 10 இடங்களை கூட கைப்பற்ற முடியாமல் காங்., கட்சி தவித்து வருகிறது. இம்முறையாவது இரட்டை இலக்கத்தில் வெற்றி கிட்டுமா என்ற கவலையில் உள்ளது.
நாட்டை 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தது காங்கிரஸ் கட்சி. கர்நாடகாவில் கடந்த 1999 முதல் 2004 வரை எஸ்.எம்.கிருஷ்ணா தலைமையில் ஆட்சி நடந்தது. 1999ல் நடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் 18 இடங்களில் வெற்றி பெற்றது.
அதன்பின், ஒவ்வொரு மாநிலத்திலும் தனது செல்வாக்கை காங்., இழந்து வந்தது. அது அடுத்தத்த லோக்சபா, சட்டசபை தேர்தல்களிலும் எதிரொலித்தது. கடந்த 20 ஆண்டுகளில் நடந்த நான்கு லோக்சபா தேர்தலில்களில், 2004ல் எட்டு; 2009ல் ஆறு; 2014ல் ஒன்பது; 2019ல் ஒரு தொகுதியில் மட்டுமே காங்., வெற்றி பெற்றது.
இதில், மத்தியில் 2004, 2009 என இரு முறை காங்கிரஸ் ஆட்சியை பிடித்த போதும், இரட்டை இலக்கத்தில் இடங்களை பிடிக்க முடியவில்லை. 2009ல் ம.ஜ.த.,வுடன் கூட்டணி அமைத்த போதிலும், ஒரு இடத்தில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த சாபத்தை போக்க இம்முறை 20 தொகுதிகளாவது வெற்றி பெற வேண்டும் என்று அக்கட்சி இலக்கு நிர்ணயித்து உள்ளது.
இது தொடர்பாக எம்.எல்.ஏ.,வும், தேர்தல் குழுவின் துணைத் தலைவருமான ரிஸ்வான் ஹர்ஷத் கூறியதாவது:
கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தல் முடிவும், காங்கிரஸ் செயல்படுத்திய சமூக நீதி திட்டங்களுக்கு மக்கள் அளித்த வரவேற்பும் எங்கள் நம்பிக்கையை அதிகரித்து உள்ளன.
கடந்த 10 மாதங்களில் எங்கள் அரசு மேற்கொண்ட மக்கள் தொடர்பு திட்டங்களால், குறைந்தது 20 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். தேர்தல் பத்திரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஊழலில் ஈடுபட்டிருப்பது மக்களுக்கு தெரியும்.
காங்கிரஸ் பற்றிய மக்களின் பார்வை மாறிவிட்டது. பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியால் இரு கட்சி தொண்டர்களும் அடிமட்ட அளவில் கலக்கமடைந்து உள்ளனர். இதனால் பலர் காங்கிரசில் இணைந்து வருகின்றனர். இது கட்சிக்கு சாதகமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி மட்டுமின்றி, பா.ஜ.,வில் தலைவர்கள் இடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியும், காங்கிரசுக்கு நம்பிக்கை அளித்து உள்ளது.
அத்துடன் இம்முறை புது முகங்கள், பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர். ஆனால், மாநிலத்தில் மோடியின் பெயர் தான், காங்கிரசுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. அத்துடன் பல அமைச்சர்கள் போட்டியிட தயங்குவதும் அக்கட்சிக்கு இழப்பை ஏற்படுத்தலாம்.

