தொடரும் பிரீத்தம் கவுடா பிடிவாதம் ஹாசனில் கரையேறுவாரா பிரஜ்வல்?
தொடரும் பிரீத்தம் கவுடா பிடிவாதம் ஹாசனில் கரையேறுவாரா பிரஜ்வல்?
ADDED : ஏப் 23, 2024 06:32 AM

ஹாசன், : ஹாசனில் ம.ஜ.த., வேட்பாளர் பிரஜ்வல், மாநில பா.ஜ., செயலர் பிரீத்தம் கவுடா இடையே இன்னும் இணக்கம் ஏற்படாததால், கட்சி தலைவர்கள் சோர்வடைந்து உள்ளனர்.
கர்நாடகாவில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அமைந்ததில் இருந்தே, ஹாசனில் பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., பிரீத்தம் கவுடா அதிருப்தியில் இருந்து வருகிறார். இத்தொகுதி ம.ஜ.த.,வுக்கு ஒதுக்கப்பட்டது, மேலும் அவருக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரஜ்வலுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரமும் செய்யவில்லை. கட்சி மேலிட பொறுப்பாளர் ராதா மோகன்தாஸ் அகர்வால் நேரில் வந்து சமாதானம் செய்தும், 'எனது ஆதரவின்றியே பிரஜ்வல் வெற்றி பெறுவார்' என பிரீத்தம் கவுடா தெரிவித்து வருகிறார். இதனால், மேலிட தலைவர்கள் சமாதானம் தோல்வியடைந்தது.
பிரீத்தம் கவுடா ஆதரவாளர்கள் சிலர், காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயஷ் படேலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதும் ம.ஜ.த.,வினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அதே வேளையில், தனது மகனை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதில் தந்தை ரேவண்ணா தீவிரமாக செயல்படுகிறார். இதற்காக அவரும், பிரஜ்வலும், பிரீத்தமின் உறவினர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர். இது பிரீத்தம் கவுடாவின் கோபத்தை மேலும் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா பிரசாரம் செய்ய வந்த போதும் கூட, பிரீத்தம் கவுடா பங்கேற்கவில்லை.
அரகலகூடில் ம.ஜ.த., - பா.ஜ., இணைந்து நடத்திய பிரசாரத்திலும் கூட, பிரீத்தம் கவுடாவின் படம் எந்த விளம்பர பேனர்களிலும் இடம் பெறவில்லை. ஆயினும், பா.ஜ.,வில் உள்ள அனைத்து தலைவர்களையும் சந்தித்து, அவர்களின் நம்பிக்கையை பெற ரேவண்ணா முயற்சித்து வருகிறார்.

