சென்னபட்டணாவில் வியூகம் வகுக்கும் பா.ஜ., கூட்டணி; துணை முதல்வர் களமிறங்குவாரா?
சென்னபட்டணாவில் வியூகம் வகுக்கும் பா.ஜ., கூட்டணி; துணை முதல்வர் களமிறங்குவாரா?
ADDED : ஜூன் 22, 2024 04:15 AM
ராம்நகர்,: சென்னபட்டணா இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக, துணை முதல்வர் சிவகுமார் போட்டியிட்டால், அவரை தோற்கடிக்க வலுவான வேட்பாளரை களம் இறக்குவது குறித்து, பா.ஜ., -- ம.ஜ.த., கூட்டணித் தலைவர்கள் வியூகம் வகுத்து வருகின்றனர்.
கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் ராம்நகர் மாவட்டம், கனகபுரா எம்.எல்.ஏ.,வாக உள்ளார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பெங்களூரு ரூரல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட சிவகுமார் தம்பி சுரேஷ் தோற்றார்.
தம்பியின் அரசியல் எதிர்காலத்தை கட்டமைக்க சிவகுமார் முயற்சி செய்து வருகிறார்.
தொகுதி தியாகம்
ராம்நகரின் சென்னபட்டணா தொகுதிக்கு நடக்க உள்ள இடைத்தேர்தலில், சுரேஷை போட்டியிட வைக்க முயற்சி நடந்து வருகிறது. ஆனால் அவர் யோசிக்கிறார்.
இந்நிலையில் தம்பிக்காக தன் தொகுதியை தியாகம் செய்ய, சிவகுமார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது சென்னபட்டணா இடைத்தேர்தலில் போட்டியிட்டு சிவகுமார் வெற்றி பெற்றால், கனகபுரா எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வார்.
மாநில அரசியல்
அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தால், சுரேஷை நிற்க வைத்து வெற்றி பெற செய்து, அமைச்சராகி மாநில அரசியலில் ஈடுபடுத்தவும், திட்டம் வகுத்து உள்ளார்.
இதற்கு கட்சி மேலிடம் அனுமதி வழங்குமா என தெரியவில்லை. சிவகுமார் போட்டியிட்டால் அவரை தோற்கடிக்க பா.ஜ., -- ம.ஜ.த., கூட்டணி தலைவர்கள் கடுமையாக முயற்சி செய்வர்.
சென்னபட்டணா தொகுதி ம.ஜ.த., கோட்டையாக உள்ளது. இந்த தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.,வாக இருந்த குமாரசாமி, எம்.பி.,யாகி மத்திய அமைச்சர் ஆனதால், இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
இடைத்தேர்தலில் போட்டியிட குமாரசாமி மகன் நிகில், பா.ஜ., முன்னாள் அமைச்சர் யோகேஸ்வர் இடையில் போட்டி ஏற்பட்டுள்ளது. நிகில் ஏற்கனவே இரண்டு தேர்தலில் தோல்வி அடைந்தவர்.
இதனால் அவரை வேட்பாளராக நிறுத்தினால், அனுதாப ஓட்டு கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
அதேநேரம், யோகேஸ்வர் சென்னபட்டணாவில் இருந்து ஐந்து முறை எம்.எல்.ஏ., ஆகியுள்ளார். சிவகுமார் களம் இறங்கினால், அவருக்கு வலுவான போட்டியாளராக யோகேஸ்வர் இருப்பார் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.
சிவகுமாரை தோற்கடிக்க, எதிர்க்கட்சி கூட்டணி தலைவர்கள் இப்போது இருந்தே வியூகம் வகுக்க ஆரம்பித்துஉள்ளனர்.

