ADDED : ஆக 01, 2024 12:11 AM

பெங்களூரு : 'மூடா' முறைகேடு தொடர்பாக முதல்வர் சித்தராமையாவிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்குவது தொடர்பாக, சட்ட வல்லுனர்களிடம் இருந்து, கர்நாடக கவர்னர் தாவர்சாந்த் கெலாட் அறிக்கை பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
குற்றச்சாட்டு
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வரின் சொந்த ஊரான மைசூரில் உள்ள 'மூடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பயனளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் 4,000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முதல்வர் மனைவி பார்வதிக்கு, மைசூரு விஜயநகர் பகுதியில் நிலம் வாங்கி கொடுத்திருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை, முதல்வர் மறுத்து உள்ளார்.
சமூக ஆர்வலர் ஆபிரகாம், கர்நாடக கவர்னர் தாவர்சாந்த் கெலாட்டை சந்தித்து பேசினார். 'மூடாவில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக முதல்வர் சித்தராமையா மீது புகார் அளித்ததுடன், அவர் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என்றும் கேட்டு கொண்டார்.
இதையடுத்து முதல்வர் மீது விசாரணைக்கு உத்தரவிடுவது தொடர்பாக, சட்ட வல்லுனர்களிடம் இருந்து கவர்னர் அறிக்கை கேட்டிருந்தார். சட்ட வல்லுனர்கள் அறிக்கை, கவர்னருக்கு கிடைத்திருப்பதாக தகவல் வெளியானது.
இதற்கிடையில் நேற்று முன்தினம் டில்லி சென்ற சித்தராமையா, மேலிட தலைவர்களை சந்தித்து பேசினார். உடனடியாக அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டி, முதல்வரிடம் விசாரணை நடத்த கவர்னர் அனுமதி வழங்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றும்படி, மேலிட தலைவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
அமைச்சரவை கூட்டம்
இன்று காலையில், பெங்களூரு காவேரி இல்லத்தில் அமைச்சர்களுக்கு, காலை உணவுக்கு முதல்வர் ஏற்பாடு செய்துள்ளார். அதன்பின் அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது.
இந்த கூட்டத்தில் 'முதல்வரிடம் விசாரணை நடத்த கவர்னர் அனுமதி வழங்க கூடாது' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
கடந்த 2010 -- 2011 ல் எடியூரப்பா முதல்வராக இருந்தபோது, அவர் மீது நிலம் முறைகேடு புகார் எழுந்தது. அப்போதைய கவர்னர் பரத்வாஜ், எடியூரப்பா மீது விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதனால் எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். நில முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார்.
தற்போது மூடா வழக்கில் கவர்னர் தாவர்சாந்த் கெலாட் தன் மீது விசாரணைக்கு உத்தரவிட்டு விடுவாரோ என்று, சித்தராமையாவுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. அவரும் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்திஉள்ளார்.