பிரதமரை விவாதத்துக்கு அழைப்பதா? ராகுல் மீது தேஜஸ்வி சூர்யா பாய்ச்சல்!
பிரதமரை விவாதத்துக்கு அழைப்பதா? ராகுல் மீது தேஜஸ்வி சூர்யா பாய்ச்சல்!
ADDED : மே 12, 2024 09:53 PM

பெங்களூரு: ''பிரதமர் நரேந்திர மோடியை, விவாதத்துக்கு அழைக்க ராகுல் யார். இவர் பிரதமர் வேட்பாளரா?,'' என பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா கேள்வி எழுப்பினார்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் வாக்குறுதி அறிக்கைகள் வெளியிட்டிருந்தன. தேர்தல் வாக்குறுதி அறிக்கை குறித்து, இரண்டு கட்சிகளும் பரஸ்பரம் விமர்சித்தன. கேள்வி எழுப்பின. மக்களுக்கும் கூட இந்த கட்சிகளின் வாக்குறுதி அறிக்கை தொடர்பாக, பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.
எனவே இது குறித்து பகிரங்கமாக விவாதிக்க, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லோகுர், டில்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அஜித் பிரகாஷ் ஷா, மூத்த பத்திரிக்கையாளர் ராம் ஆகியோர் திட்டமிட்டனர். இதில், பங்கேற்கும்படி பிரதமர் மோடி மற்றும் ராகுலுக்கு கடிதம் எழுதினர்.
'நாட்டு மக்கள் இரண்டு கட்சிகளிடமும், பதில் எதிர்பார்க்கின்றனர். பகிரங்க விவாதம் ஏற்பாடு செய்துள்ளோம். நீங்கள் பங்கேற்று விளக்கம் தாருங்கள்' என்றும் அழைப்பு விடுத்தனர்.
இது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல், 'பகிரங்க விவாதம் ஏற்பாடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இதில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். பிரதமர் மோடி வருகை தர சம்மதித்தால், நானும் நிச்சயம் பங்கேற்பேன். பிரதமர் வர சம்மதித்த பின், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்னிடம் தெரிவியுங்கள்' என கூறியிருந்தார்.
இது குறித்து, பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா, தன் எக்ஸ் பதிவில், 'பிரதமர் மோடியை பகிரங்க விவாதத்துக்கு அழைக்க, ராகுல் யார். இவர் பிரதமர் வேட்பாளரா. இண்டியா கூட்டணி பற்றி பேசுவதை விடுங்கள். முதலில் காங்கிரசின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க வேண்டும். கட்சியின் தோல்வி பொறுப்பை, தானே ஏற்பதாக ராகுல் அறிவிக்கட்டும். அதன்பின் பிரதமர் மோடியுடன் விவாதிக்கலாம்' என தெரிவித்துள்ளார்.