ADDED : ஜூலை 11, 2024 12:56 AM
மும்பை, மஹாராஷ்டிராவின் மும்பையில் சொகுசு கார் மோதி பெண் உயிரிழந்த விவகாரத்தில், விபத்து ஏற்படுத்திய இளைஞரின் தந்தை, சிவசேனா கட்சியின் துணைத்தலைவர் பதவியில் இருந்து நேற்று நீக்கப்பட்டார்.
மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த பிரதீப் நகாவா - காவேரி தம்பதி கடந்த 7ம் தேதி அதிகாலை வோர்லி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
அப்போது, அவர்கள் மீது அந்த வழியாக வந்த பி.எம்.டபிள்யூ., கார் மோதியதில், பிரதீப் துாக்கி எறியப்பட்டார். காவேரி மீது கார் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக, கார் உரிமையாளரான சிவசேனா நிர்வாகி ராஜேஷ் ஷா மற்றும் டிரைவர் ராஜ்ரிஷி பிதாவத் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், மது போதையில் ராஜேஷ் ஷாவின் மகன் மிஹிர் ஷா விபத்து ஏற்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. தலைமறைவாக இருந்த அவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, மிஹிரை வரும் 16ம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிவசேனா கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து ராஜேஷ் ஷா அதிரடியாக நேற்று நீக்கப்பட்டார். அக்கட்சி செயலர் சஞ்சய் மோரே வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவை தொடர்ந்து அவர் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நேற்று 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்த ஏக்நாத் ஷிண்டே, “குற்றவாளி யாராக இருந்தாலும் தப்ப முடியாது, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு சட்டம் மற்றும் நிதி உதவி வழங்கப்படும்,” என்றார்.
இதற்கிடையே, விபத்து ஏற்படுத்திய மிஹிர் ஷா, மது அருந்திய விடுதியை நேற்று மும்பை நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த பகுதிகளை இடித்து தள்ளிய அவர்கள், மதுபான விடுதிக்கு 'சீல்' வைத்தனர்.