இத்தாலி தீவு அருகே படகு கடலில் மூழ்கியது: அகதிகள் 20 பேர் பலியான சோகம்
இத்தாலி தீவு அருகே படகு கடலில் மூழ்கியது: அகதிகள் 20 பேர் பலியான சோகம்
ADDED : ஆக 13, 2025 08:51 PM

ரோம்: 100 அகதிகளுடன் சென்ற படகு ஒன்று இத்தாலியத் தீவு ஒன்றில் கடலில் மூழ்கியது. இதில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் பலரை காணவில்லை.
உள்நாட்டு போர் காரணமாக ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமானோர் ஐரோப்பிய நாடுகளுக்கு புகலிடம் தேடி செல்கின்றனர். அப்படிச் செல்லும் போது படகு கடலில் மூழ்கி பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் 675 பேர் உயிரிழந்துள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது. கணக்கில் வராதோர் எண்ணிக்கை எவ்வளவு என தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், லிபியாவில் இருந்து 92 முதல் 97 பேர் வரை படகு ஒன்றில் இத்தாலி நோக்கி பயணித்து கொண்டிருந்தனர். லம்பேடுசா பகுதியில் அந்த படகு கடலில் மூழ்கியது. இதில் 20 பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் பலரை காணவில்லை. அவர்களை தேடும் பணி மும்முரமாக நடந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இவர்கள் எத்தனை நாட்கள் கடல் வழியாக பயணித்தனர் என்ற தகவலும் இதுவரை வெளியாகவில்லை.