ADDED : மார் 08, 2025 01:55 AM
ஹூஸ்டன்: அமெரிக்காவில், நடுவானில் பறந்த விமானத்தில், பெண் பயணி ஒருவர், திடீரென ஆடைகளை கழற்றி, நிர்வாணமாக ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் இருந்து, அரிசோனா மாகாணத்தின் பீனிக்ஸ் நகருக்கு, சமீபத்தில், சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் புறப்பட்டது.
விமானம் நடுவானில் பறந்த போது, பெண் பயணி ஒருவர், திடீரென ஆடைகளை கழற்றி நிர்வாணமாக, விமானத்தில் கத்தியபடி அங்குமிங்கும் ஓடினார்.
மேலும், விமான ஊழியர்களுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, விமானிகள் அறையின் கதவை பல முறை அவர் தட்டினார்.
'என்னை கீழே இறக்கி விடுங்கள்' என, அந்த பெண் பயணி, 25 நிமிடங்கள் கத்தியபடி நிர்வாணமாக வலம் வந்தார். இதனால் விமானத்தில் இருந்த மற்ற பயணியர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, விமானம் ஹூஸ்டன் நகரிலேயே மீண்டும் தரையிறங்கியது. விமான நிலையத்துக்கு வந்த போலீசார், போர்வையால் மூடி அந்த பெண்ணை அழைத்துச் சென்றனர்.
தற்போது அந்த பெண், மனநல சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இந்த சம்பவத்தால், 90 நிமிடங்கள் தாமதமாக பீனிக்ஸ் நகருக்கு விமானம் புறப்பட்டுச் சென்றது.