குளிர்கால மாசுபாட்டை தவிர்க்க வீட்டில் இருந்து வேலை திட்டம்
குளிர்கால மாசுபாட்டை தவிர்க்க வீட்டில் இருந்து வேலை திட்டம்
ADDED : ஆக 29, 2024 10:10 PM
விக்ரம் நகர்:“காற்று மாசுபாட்டை எதிர்த்து போராடுவதற்கான குளிர்கால செயல்திட்டத்தில் வீட்டிலிருந்து வேலை செய்வது, விழிப்புணர்வு பிரசாரங்கள் உள்ளிட்டவை இருக்கும்,” என, மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தார்.
குளிர்கால செயல் திட்டம் குறித்து நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
குளிர்காலத்தில் காற்று மாசுபாட்டை குறைப்பது தொடர்பாக சுற்றுச்சூழல் நிபுணர்கள், பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுடன் மாநில அரசு ஆலோசனை நடத்தியது. அவர்களின் கருத்துக்கள், ஆலோசனைகள் கேட்கப்பட்டன.
அதன் அடிப்படையில், ஒரு பயனுள்ள குளிர்கால செயல் திட்டத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும்.
காற்று மாசுபாட்டை குறைப்பதில் மாற்றத்தை நம்மிடம் இருந்து துவக்க வேண்டும். சிக்னல்களில் நிற்கும்போது வாகனத்தின் இயக்கத்தை நிறுத்துவதால் மாசுபாட்டை குறைக்க முடியும்.
தனியார் வாகனங்களை நாங்கள் தான் அதிகம் பயன்படுத்துகிறோம். கட்டுமானப் பணிகளில் ஈடுபடுகிறோம். சிக்னல்களில் எங்கள் வாகனங்களை அணைக்கத் தவறுகிறோம். மாசுபாட்டைக் குறைக்க எங்கள் நடத்தையில் மாற்றம் அவசியம்.
சுய விழிப்புணர்வு முக்கியம். ஒவ்வொருவரின் சிறிய நடவடிக்கைகளும் பெரிய மாற்றத்தை கொண்டு வரும்.
குளிர்கால செயல்திட்டத்தில் வீட்டில் இருந்து வேலை செய்யும் நடைமுறையை பின்பற்ற தனியாரிடமும் கோரிக்கை விடுக்கப்படும். இதற்காக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

