யதுவீர் - திரிஷிகா குமாரி 2வது மகனுக்கு பெயர் சூட்டல்
யதுவீர் - திரிஷிகா குமாரி 2வது மகனுக்கு பெயர் சூட்டல்
ADDED : பிப் 22, 2025 05:20 AM

மைசூரு: மைசூரு மன்னர் குடும்பத்தின் யதுவீர் - திரிஷிகா குமாரியின் இரண்டாவது வாரிசுக்கு, 'யுகதக் ஷா கிருஷ்ணராஜ உடையார்' என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
மைசூரு மன்னர் குடும்பத்தின் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் - திரிஷா குமாரி தம்பதிக்கு 2017ல், முதல் மகன் பிறந்தார். இவருக்கு யதுவீர் நரசிம்மராஜ உடையார் என பெயர் சூட்டப்பட்டது.
இரண்டாவது முறையாக கர்ப்பமான திரிஷிகா குமாரிக்கு, கடந்தாண்டு நவராத்திரியின் போது, 2024 அக்., 11ல் இரண்டாவது மகன் பிறந்தார்.
இரண்டாவது மகனுக்கு பெயர் சூட்டும் நிகழ்ச்சி, மன்னர் குடும்பத்தின் பிரமோதா தேவி முன்னிலையில் இம்மாதம் 19ல் அரண்மனையில் உள்ள, 'கன்னட தொட்டி' பகுதியில் நடந்தது. தொட்டிலில் குழந்தையை வைத்து, புரோகிதர் பூஜை செய்தார். இப்பூஜையில் தம்பதி பங்கேற்றனர்.
பூஜை முடிந்ததும், இரண்டாவது மகனுக்கு 'யுகதக் ஷா கிருஷ்ணராஜ உடையார்' என பெயர் சூட்டப்பட்டது. பின், குழந்தையின் காதில் தம்பதி இருவரும், மூன்று முறை குழந்தையின் பெயரை கூறினர்.
'யுகா' என்றால், சனாதன தர்மத்தில் சத்ய யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என நான்கு யுகங்களை குறிக்கின்றன. 'தியக் ஷா' என்றால், திறமையானவர், நிபுணத்துவம், நேர்மையானவர், ஒரு குழுவின் தலைவர் என்பதை குறிக்கிறது. 'கிருஷ்ணா' என்றால், கிருஷ்ணா என்ற வார்த்தை, சமஸ்கிருதத்தில் உருவானது. கருப்பு நிறம் அல்லது அழகானவர் என்பதை குறிக்கிறது.

