ADDED : ஆக 15, 2024 03:41 AM

ஹாசன் மாவட்டம், பேலுாரில் அமைந்துள்ள யகசி அணை. பேலுார் பஸ் நிலையத்தில் இருந்து 2.5 கி.மீ., துாரத்தில் உள்ளது. ஹாசன், சிக்கமகளூரு மாவட்ட விவசாயிகள் நலனுக்காக 2001ல் யகசி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டது. 1,280 மீட்டர் நீளமும், 26 மீட்டர் உயரமும் கொண்ட இந்த அணையில், 3.1 டி.எம்.சி., தண்ணீர் வரை இங்கு சேமிக்க முடியும்.
இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்பு பார்வையாளர்களை மயக்குகிறது. அணையையும், சுற்றுவட்டார பகுதிகளின் அழகையும் ரசிக்க, தினமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருகின்றனர்.
நகரின் இயந்திர வாழ்க்கையில் இருந்து விலகி, குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்க ஏற்ற இடம். அணையின் குளிர்ந்த காற்று, மனதையும், உடலையும் புத்துணர்ச்சி அடைய செய்யும்.
இத்துடன் இங்கு நீர் சாகச விளையாட்டுகள் மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஏற்ற இடம்.
வாழைப்பழ படகு சவாரி, உல்லாச படகு, வேகப் படகு, காயாக்கிங், ஜெட் ஸ்கீயிங் உட்பட பல்வேறு நீர் விளையாட்டுகள், சுற்றுலா பயணியரை ஈர்க்கின்றன. தினமும் காலை 7:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை திறந்திருக்கும்.
வேகப்படகில் குறைந்தபட்சம் நான்கு பேர் பயணிக்கலாம்; ஒருவருக்கு 600 ரூபாய். வாழைப்பழ படகில் குறைந்தபட்சம் ஆறு பேர் பயணிக்கலாம்; ஒருவருக்கு 500 ரூபாய். ஜெட் ஸ்கீயிங்கில் ஒருவர் மட்டுமே பயணிக்கலாம்; அவருக்கு 300 ரூபாய்; காயாக்கிங்கில் இருவர் பயணிக்கலாம்; ஒருவருக்கு 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பெங்களூரில் இருந்து விமானத்தில் செல்வோர், ஹாசன் விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து டாக்சி, ஆட்டோவில் செல்லலாம்; ரயிலில் செல்வோர் பேலுார் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோ, டாக்சியில் செல்லலாம். பஸ்சில் செல்வோர் பேலுார் பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோ, டாக்சியில் செல்லலாம்.
யகசி அணையில் உள்ள பல்வேறு நீர் சாகச விளையாட்டுகள்.
- நமது நிருபர் -