மனைவி, பக்கத்து வீட்டுக்காரரை கொலை செய்த வாலிபர் கைது
மனைவி, பக்கத்து வீட்டுக்காரரை கொலை செய்த வாலிபர் கைது
ADDED : மார் 04, 2025 01:17 AM
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில், நடத்தையில் சந்தேகமடைந்து மனைவி மற்றும் பக்கத்து வீட்டுக்காரரை அரிவாளால் வெட்டி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவின் பத்தனம்திட்டா அருகே கலஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் பைஜூ 33. அவரது மனைவி வைஷ்ணவி 27. பக்கத்து வீட்டில் வசிப்பவர் விஷ்ணு 34. விஷ்ணுவுக்கும், தன் மனைவிக்கும் தொடர்பு இருப்பதாக பைஜூ சந்தேகித்து வந்தார். இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, மீண்டும் இப்பிரச்னையில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த பைஜூ வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து, மனைவியை வெட்ட பாய்ந்தார். வீட்டிலிருந்து வெளியே ஓடிய வைஷ்ணவி, பக்கத்து வீட்டில் அபயம் தேடி நுழைந்தார். ஆனால், விடாமல் துரத்தி சென்ற பைஜூ அவரை வெட்டி கொலை செய்தார்.
இந்த சத்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியே வந்த விஷ்ணுவையும், பைஜூ துரத்தி சென்று சரமாரியாக வெட்டினார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு பத்தனம்திட்டா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். பைஜூவை பத்தனம்திட்டா போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.