ரூ.20 லட்சம் ஹவாலா பணத்துடன் பாலக்காடு அருகே வாலிபர் கைது
ரூ.20 லட்சம் ஹவாலா பணத்துடன் பாலக்காடு அருகே வாலிபர் கைது
ADDED : ஜூலை 19, 2024 05:08 PM

பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்ட போலீசார், நேற்று முன்தினம் இரவு, தமிழக எல்லை பகுதியான மேனோன்பாறையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, கோவையில் இருந்து பாலக்காடு நோக்கி வந்த காரை சோதனைக்காக நிறுத்தினர். ஆனால், கார் நிற்காமல் வேகமாக சென்றது. போலீசார் அந்த காரை விரட்டி சென்று, குற்றிப்பள்ளம் பகுதியில் மடக்கினர். காரை சோதனை செய்த போது, அதில் மறைவாக அறை அமைத்து, 20 லட்சம் ரூபாய் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணம், ஹவாலா பணம் என்பதை, விசாரணையில் போலீசார் கண்டறிந்தனர்.
காரில் இருந்த மலப்புரம் மாவட்டம், தானுாரை சேர்ந்த முகமது ஹாஷிம், 31, என்பவர், தமிழகத்தில் இருந்து மலப்புரத்துக்கு, பணத்தை காரில் கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது.
மேலும், ஹவாலா பணம் கடத்தல் தொடர்பாக இவர் மீது பரப்பனங்காடி, பெரிந்தல்மண்ணா, புதுச்சேரி (கசபா) ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் உள்ளன. இதையடுத்து, அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.