ADDED : செப் 09, 2024 04:39 AM
தார்வாட் : காதல் தோல்வியால், லாட்ஜ் அறையில் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சிக்கமகளூரு சிகேஹட்லு காமனகெரே கிராமத்தில் வசித்தவர் சின்மய், 23. இவர் இளம்பெண் ஒருவரை காதலித்தார். சமீபத்தில் காதலி, தன்னை விட்டு விலகியதால் வருத்தம் அடைந்த சின்மய், மன அழுத்தத்துக்கு ஆளானார். செப்டம்பர் 4ல், வீட்டை விட்டு வெளியேறினார்.
தார்வாட் ரயில் நிலையம் அருகில், லாட்ஜ் ஒன்றில் அறை எண் 212ல் தங்கியிருந்தார். செப்டம்பர் 6ம் தேதி மாலை, அறையை சுத்தம் செய்ய லாட்ஜ் ஊழியர் கதவை தட்டிய போது, உட்புறமாக தாழிடப்பட்டிருந்தது. பல முறை தட்டியும் திறக்காததால், உறக்கத்தில் இருக்கலாம் என, நினைத்து சென்று விட்டார்.
நேற்று முன் தினம் இரவு, அறையை சுத்தம் செய்ய மீண்டும் கதவை தட்டினார். ஆனால் அப்போதும் திறக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த ஊழியர், மாற்று சாவியால் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, சின்மய் இறந்து கிடந்தது தெரிந்தது. அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த போலீசார், உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து, விசாரிக்கின்றனர்.