UPDATED : ஆக 24, 2024 03:09 AM
ADDED : ஆக 24, 2024 12:35 AM

மும்பை, “மஹாராஷ்டிர சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், என்னைப் பற்றிய தகவல்களை துல்லியமாக அறியவே, 'இசட் பிளஸ்' பாதுகாப்பை மத்திய அரசு வழங்கி உள்ளது,” என, தேசியவாத காங்., சரத்சந்திர பவார் பிரிவின் தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா - பா.ஜ., - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, அக்டோபர் இறுதியில் அல்லது நவம்பரில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
பிரதான எதிர்க்கட்சி கூட்டணியாக, 'மகா விகாஸ் அகாடி' உள்ளது. இதில், காங்., - உத்தவ் தாக்கரேவின் சிவசேனா - சரத் பவாரின் தேசியவாத காங்., பிரிவு அங்கம் வகிக்கின்றன. ஆளும் 'மஹாயுதி' கூட்டணியில், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா - பா.ஜ., - அஜித் பவாரின் தேசியவாத காங்., உள்ளன.
சரத் பவாரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கிடைத்த தகவலின்படி, அவருக்கு, இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பை வழங்கி, சமீபத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இதன்படி, சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஆயுதமேந்திய 55 வீரர்கள், 24 மணி நேரமும், சுழற்சி முறையில் சரத் பவாருக்கு பாதுகாப்பு வழங்குவர்.
இந்நிலையில், நவி மும்பையில், இசட் பிளஸ் பாதுகாப்பு குறித்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சரத் பவார் நேற்று அளித்த பதில்:
மஹாராஷ்டிர சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த நேரத்தில், நான் யாரை சந்திக்கிறேன்; எங்கு செல்கிறேன் என்பதை அறிய, இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கி உள்ளது. என்னைப் பற்றிய தகவல்களை அறிய அரசு மிகவும் ஆவலாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.