மஹா.வில் தீயணைப்பு நிலைய கட்டட மேற்கூரை இடிந்து விபத்து; உள்ளே சிக்கிய 5 பேர்
மஹா.வில் தீயணைப்பு நிலைய கட்டட மேற்கூரை இடிந்து விபத்து; உள்ளே சிக்கிய 5 பேர்
ADDED : அக் 01, 2025 07:02 AM

கோல்ஹாப்பூர்: மஹாராஷ்டிராவில், தீயணைப்பு நிலைய கட்டுமான பணியின் போது மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
கோல்ஹாப்பூரில் தீயணைப்பு நிலையத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக அங்கு மேற்கூரை அமைக்கும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தில் இருந்தது.
இந் நிலையில், கட்டுமான பணியின் போது மேற்கூரை ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் கட்டுமான ஒப்பந்ததாரர், தொழிலாளர்கள் என 6 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக அங்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் இறங்கினர். சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர் அவர்களில் 5 பேரை படுகாயங்களுடன் மீட்டனர். ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
விசாரணையில் உயிரிழந்தவர் பெயர் நவ்நாத் அன்னப்பா ககல்கார் (38) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸ் ஏஎஸ்பி மணிஷ் ரன்பீஸ் கூறியதாவது;
கோல்ஹாப்பூர் மாநகராட்சியில் தீயணைப்புத் துறை கட்டடத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. வேலைகள் இறுதி கட்டத்தில் இருந்தன. அப்போது சிமெண்ட் மேற்கூரை இடிந்து விழுந்துவிட்டது.
ஒப்பந்ததாரர் மற்றும் பிற ஊழியர்கள் உட்பட ஆறு பேர் உள்ளே சிக்கிக்கொண்டனர். தீயணைப்புப் படையினர் ஐந்து பேரை மீட்டனர். ஒருவர் உயிரிழந்துவிட்டார்.
இவ்வாறு மணிஷ் ரன்பீஸ் கூறினார்.
கட்டுமான பணியின் போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அதன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்து இருக்கலாம். இருப்பினும், விசாரணையின் முடிவில் உண்மை நிலவரம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.