10 பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் காங்.,கில் இணைய திட்டம்?
10 பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் காங்.,கில் இணைய திட்டம்?
ADDED : டிச 13, 2024 05:32 AM

பெங்களூரு: ''பா.ஜ.,வின் நடவடிக்கையால் அதிருப்தியடைந்துள்ள அக்கட்சியின் 8 முதல் 10 எம்.எல்.ஏ.,க்கள் காங்கிரசில் இணைய தயாராக இருக்கின்றனர்,'' என பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ., சோமசேகர் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நான், எந்த கட்சி விரோத செயலையும் செய்யவில்லை. நோட்டீஸ் அளித்தால், அனைத்திற்கும் பதிலளிக்க தயாராக இருக்கிறேன்.
என்னை தகுதி நீக்கமும் செய்ய முடியாது. என் பதவியை தக்க வைத்து கொள்ளும் அளவில் தேர்ச்சி பெற்றுள்ளேன். நான், எதை பற்றியும் கவலைப்படவில்லை.
கடந்தாண்டு சட்டசபை தேர்தலின் போது, என் தொகுதி பா.ஜ., தலைவர்கள், ம.ஜ.த.,வுடன் இணைந்து, என்னை தோற்கடிக்க முயற்சித்தனர். இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
பா.ஜ.,வுக்குள் நடக்கும் நடவடிக்கைகள் குறித்து பலர் அதிருப்தியில் உள்ளனர். மாநிலத்தில் பா.ஜ., வளர்ச்சி அடையுமா, அடையாதா என்று கவனித்து வருகின்றனர்.
வளர்ச்சி அடையவில்லை என்றால், கட்சியை விட்டு வெளியேற, 8 முதல் 10 எம்.எல்.ஏ.,க்கள் காங்கிரசில் இணைய தயாராக உள்ளனர்.
நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். காங்கிரசில் சேர விரும்பும் எம்.எல்.ஏ.,க்களின் பெயர்களை வெளியிட நினைத்தால், பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி பெயரை வெளிப்படுத்துவேன். இதில், பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஒருவரும் 'நானும் உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன்' என்றார்.
என் பதவி காலம், 2028ல் முடியும் வரை பா.ஜ.,வில் தான் இருப்பேன். காங்கிரசில் சேரும் திட்டம் தற்போது இல்லை. அடுத்து என்ன நடக்கும் என்பதை காலம் சொல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.

