பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்பத்தில் 10 பேர் பலி
பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்பத்தில் 10 பேர் பலி
ADDED : மே 08, 2025 12:47 AM
'ஆ ப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், நம் படைகள் நடத்திய அதிரடி நடவடிக்கைகளில், பயங்கரவாதி மசூத் அசாரின் சகோதரி உட்பட, 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள், கடந்த மாதம், 22ம் தேதி நடத்திய தாக்குதல்களில், 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், ஒன்பது இடங்களில், நம் படைகள் நேற்று முன்தினம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தின.
பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து, இந்த நடவடிக்கையை நம் படைகள் எடுத்தன. இதில், 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவரான மசூத் அசாரின் குடும்பத்தைச் சேர்ந்த, 10 பேர் இந்திய படைகளின் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்.
மசூத் அசார் பெயரில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் அவரது சகோதரி, சகோதரியின் கணவர் உள்ளிட்டோரும் அடங்குவர்.
இந்த தாக்குதலில் மசூத் அசாரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தானின் பஹவல்பூரில் உள்ள மசூத் அசாரின் வீடு, இந்திய எல்லையில் இருந்து, 100 கி.மீ., துாரத்தில் உள்ளது.