ADDED : ஏப் 10, 2024 09:38 PM

புதுடில்லி :லோக்சபா தேர்தலுக்கான 10ம் கட்ட வேட்பாளர் பட்டியலை, பா.ஜ., வெளியிட்டது.
நாடு முழுதும் வரும் 19ல் துவங்கி, ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதில் பதிவாகும் ஓட்டுகள், ஜூன் 4ல் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இத்தேர்தலை முன்னிட்டு, மத்தியில் ஆளும் பா.ஜ., எதிர்க்கட்சியான காங்., உள்ளிட்ட கட்சிகள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், லோக்சபா தேர்தலில் போட்டியிடும் ஒன்பது வேட்பாளர்கள் அடங்கிய 10ம் கட்ட பட்டியலை, பா.ஜ., வெளியிட்டது.இதன்படி, உ.பி.,யில் ஏழு; மேற்கு வங்கத்தில் ஒன்று; சண்டிகரில் உள்ள ஒரேயொரு தொகுதிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தஒன்பது பேரில் எட்டு பேர் புதுமுகங்கள். உ.பி.,யின் பல்லியா தொகுதியில், முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் நீரஜ் சேகர் களமிறக்கப்பட்டு உள்ளார். காஜிபூரில் பரஸ்நாத் ராய், மெயின்புரியில் ஜெய்வீர் சிங், அலகாபாதில் நீரஜ் திரிபாதி உள்ளிட்டோர், பா.ஜ., வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு உள்ளனர்.
மேற்கு வங்கத்தின் அசன்சோல் தொகுதியில், முன்னாள் மத்திய அமைச்சரும், பர்த்வான் - -துர்காபூர் தொகுதியின் சிட்டிங் எம்.பி.,யுமான அலுவாலியா, பா.ஜ., வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

